ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இறுதி கெடு: பெங்களூரு கோர்ட்டு உத்தரவு

பொருட்களை ஏலம் விட கோரிய வழக்கில் ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இறுதி கெடு விதித்து பெங்களூரு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

Update: 2023-10-06 18:45 GMT

பெங்களூரு:

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெங்களூரு தனிக்கோர்ட்டு கடந்த 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ந் தேதி தீர்ப்பு வழங்கியது.

இந்த தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இந்த தீர்ப்பு வந்தபோது, ஜெயலலிதா ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதால் அவரது பெயர் தீர்ப்பில் இருந்து கைவிடப்பட்டது. இதையடுத்து சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனையை அனுபவித்தனர்.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த தகவல் பெறும் உரிமை சட்ட ஆர்வலர் நரசிம்மமூர்த்தி, சொத்து குவிப்பு வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் சொத்துக்களை ஏலம் விடக் கோரி பெங்களூரு கோா்ட்டில் மனு தாக்கல் செய்தார். அந்த மனு மீது நீதிபதி மோகன் விசாரணை நடத்தி வருகிறார்.

கடந்த முறை இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதாவின் சொத்துக்கள் குறித்த விவரங்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்தனர். அந்த சொத்துக்களின் மதிப்பு குறித்து ஆராய்ந்து அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதி உத்தரவிட்டார். வழக்கு விசாரணை அக்டோபர் 6-ந் தேதிக்கு (அதாவது நேற்று) ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி பெங்களூரு கோர்ட்டில் நீதிபதி மோகன் முன்னிலையில் அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் சிறப்பு வக்கீல் கிரண் ஜவலி, தமிழக லஞ்ச ஒழிப்பு சார்பில் துணை போலீஸ் சூப்பிரண்டு புகழ்வேந்தன் ஆகியோர் ஆஜராயினர்.

அப்போது புகழ்வேந்தன், ஜெயலலிதாவின் சொத்துக்களை மதிப்பீடு செய்து அறிக்கை தாக்கல் செய்ய மேலும் 40 நாட்கள் காலஅவகாசம் வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு நீதிபதி, 40 நாட்கள் காலஅவகாசம் வழங்குவதாகவும், இதுவே கடைசி காலஅவகாசம் என்றும் தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு இறுதி கெடு விதித்து உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து வழக்கு விசாரணையை அடுத்த மாதம் (நவம்பர்) 16-ந் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்