இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்; உலகக்கோப்பை இந்தியாவில் நடைபெறும் - பிபா
இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி பிபா உத்தரவிட்டுள்ளது.
டெல்லி,
பதவி காலம் முடிந்த பின்னரும், புதிய தலைவருக்கான தேர்தலை நடத்தாமல் காலம்தாழ்த்தி வந்ததால் இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த ப்ரபுல் படேலை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. அவர் தலைமையில் இயங்கிய நிர்வாக குழுவையும் முழுமையாக கலைத்தது.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகத்தை கலைத்த சுப்ரீம் கோர்ட்டு புதிதாக தேர்தலை நடத்து ஏதுவாக 3 பேர் கொண்ட கமிட்டியை அமைத்தது. தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படும் வரை இந்த கமிட்டியே இந்திய கால்பந்து கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ அமைப்பாக செயல்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. இந்த கமிட்டி தேர்தல் நடத்தும் பணிகளை மேற்கொண்டு வந்தது.
இதனிடையே, இந்திய கால்பந்து கூட்டமைப்பில் 3-ம் நபர் தலையீடு இருப்பதாக கூறி அதன் உரிமத்தை சர்வதேச கால்பந்து கூட்டமைப்பான பிபா நீக்கியது. மேலும், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியா நடத்துவதற்கான உரிமத்தையும் பிபா தற்காலிகமாக நீக்கியது.
இந்த விவகாரம் பூதாகாரமான நிலையில் இது குறித்து சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய கால்பந்து கூட்டமைப்பை நிர்வகிக்க அமைக்கப்பட்ட குழுவை சுப்ரீம் கோர்ட்டு நீக்கியது. மேலும், இந்திய கால்பந்து கூட்டமைப்பிடமே நிர்வாகத்தை ஒப்படைத்தது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் 2-ம் தேதி கால்பந்து கூட்டமைப்பிற்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய்ய்ம் தேர்தல் நடைபெறும் என தேர்தல் நடத்தும் அதிகாரி உமேஷ் அறிவித்தார்.
இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு அமைத்த நிர்வாக குழு கலைக்கப்பட்டதையடுத்து, இந்திய கால்பந்து கூட்டமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடையை பிபா நீக்கியது. 3-ம் நபர் தலையீடு நீங்கியதையடுத்து இந்திய கால்பந்து கூட்டமைப்பின் தடை நீக்கப்படுவதாக பிபா அறிவித்துள்ளது. இதன் மூலம், 17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டி இந்தியா நடத்தப்பட உள்ளது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியை இந்தியாவில் நடத்துவதற்கான நடவடிக்கைகளை இந்திய கால்பந்து கூட்டமைப்பு எடுத்து வருகிறது.
17 வயதிற்கு உட்பட்டோருக்கான பெண்கள் உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் அக்டோபர் மாதம் 11 முதல் 30-ம் தேதி வரை மும்பை, கோவா, புவனேஷ்வர் ஆகிய 3 நகரங்களில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க.. உலகக்கோப்பை கால்பந்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு; உரிமத்தையே ரத்து செய்த பிபா - அதிர்ச்சி பின்னணி