சொத்து தகராறில் தந்தை கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை

சொத்து தகராறில் தந்தையை கொலை செய்த வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து சித்ரதுர்கா கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது.;

Update: 2022-11-05 19:00 GMT

சித்ரதுர்கா;


சொத்து தகராறு

சித்ரதுர்கா மாவட்டம் ஒசதுர்கா தாலுகா அட்ரிகாட்டே கிராமத்தை சேர்ந்தவர் நாகப்பா. இவரது மகன் லோகித்(வயது 30). இதில் நாகப்பாவிற்கு அந்த பகுதியில் சொந்தமாக நிலம் உள்ளது. இந்த நிலத்தை பங்கிடுவது தொடர்பாக நாகப்பாவிற்கும், லோகித்திற்கும் இடையே பிரச்சினை இருந்து வந்தது.

இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறும் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு தந்தை-மகன் இடையே மீண்டும் சொத்து தகராறு ஏற்பட்டது. அப்போது அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.

அடித்து கொலை

இதில் ஆத்திரமடைந்த லோகித், தனது தந்தை என்றும் பாராமல் நாகப்பாவை சரமாரியாக தாக்கியுள்ளார். மேலும் அந்த பகுதியில் கிடந்த ஆயுதங்களாலும் தாக்கி உள்ளாா். இதில் நாகப்பா படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதைப்பார்த்த லோகித் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து ஒசதுர்கா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நாகப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த லோகித்தை கைது செய்தனர்.

ஆயுள் தண்டணை

பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதுதொடர்பான வழக்கு சித்ரதுர்கா மாவட்ட கோர்ட்டில் நடந்து வந்தது. இதுகுறித்து ஒசதுர்கா போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர். இந்த வழக்கின் விசாரணை நேற்றுமுன்தினம் முடிவுக்கு வந்த நிலையில் நீதிபதி சங்கரப்பா நிம்பண்ணா கல்கனி தீர்ப்பு வழங்கினார்.

இதில் லோகித் மீதான கொலை குற்றம் நிரூபணமானதால் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். பின்னர் அவர் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்