பெற்ற மகளை கர்ப்பமாக்கிய வழக்கு: தந்தைக்கு 104 ஆண்டுகள் சிறை தண்டனை

கடந்த 7 ஆண்டுகளாக மகளிடம் தந்தை பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

Update: 2024-06-23 10:25 GMT

திருவனந்தபுரம்,

கேரளா மாநிலம் மலப்புரம் பகுதியை சேர்ந்தவர் 41 வயது தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 17 வயது மகள் உள்பட 2 குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே 17 வயது சிறுமிக்கு வயிற்று வலி ஏற்பட்டது. இதனால் அவள் அரிக்கோட்டில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டாள். அப்போது பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து டாக்டர்கள் அரிக்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் அப்பாசாலி, சப்-இன்ஸ்பெக்டர் கபீர் மற்றும் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தினர். இதில் சிறுமியை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்ததும், கடந்த 7 ஆண்டுகளாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சிறுமியின் தந்தையை போலீசார் கைது செய்தனர்.

பின்னர் சிறுமி கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டாள். இதையடுத்து டாக்டர்களின் வழிகாட்டுதலின் பேரில் கர்ப்பம் கலைக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணை மஞ்சேரி கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் 22 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இந்த வழக்கில் சிறுமியின் தந்தைக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் 104 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ரெஸ்மி தீர்ப்பளித்தார்.

மேலும் வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்க வேண்டும் என்று கூறி அவருக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் அரசு வக்கீல் மனோஜ் ஆஜராகி வாதாடினார். பின்னர் தொழிலாளியை போலீசார் தவனூர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்