விவசாயிகள் மீண்டும் போராட்டம்.. நிறைவேற்றப்படாமல் இருக்கும் முக்கிய கோரிக்கைகள் என்ன?

பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு வருகின்றனர்.;

Update: 2024-02-13 05:52 GMT

டெல்லி நோக்கி டிராக்டரில் வரும் விவசாயிகள்

புதுடெல்லி:

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020-ம் ஆண்டு டெல்லி எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தினர். ஓராண்டுக்கு மேல் நீடித்த போராட்டத்தின் இறுதியில், வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதிப்படுத்த சட்டம் கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஆனால், 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை என்று கூறி, விவசாயிகள் மீண்டும் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். சம்யுக்தா கிசான் மோர்ச்சா, கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய விவசாய அமைப்புகள் இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி நோக்கி பேரணி நடத்த அழைப்பு விடுத்தன. அதை ஏற்று, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லிக்கு புறப்பட்டு வருகின்றனர்.

விவசாயிகள் முன்வைக்கும் கோரிக்கைகளில் முதன்மையானது, பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்யும் சட்டம். நிச்சயமற்ற சந்தை நிலையை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு இந்த கோரிக்கை உயிர்நாடியாகும்.

இதேபோல் மின்சாரச் சட்டம் 2020-ஐ ரத்து செய்யவேண்டும், லக்கிம்பூர் கெரியில் போராட்டத்தின்போது உயிரிழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

நேற்று இரவு நடந்த பேச்சுவார்த்தையின்போது இந்த கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வந்தது. எனினும், 2 ஆண்டுகளுக்கு முன்பு அரசு அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதத்தை வலியுறுத்தினர்.

குறைந்தபட்ச ஆதரவு விலை, கடன் தள்ளுபடி மற்றும் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான சட்டரீதியான உத்தரவாதங்கள் ஆகியவை குறித்து விவாதிக்க குழு அமைப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அந்த குழுவின் மீது , விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இதனால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

நிலம் கையகப்படுத்துதல் சட்டம் 2013-ஐ மீண்டும் நடைமுறைப்படுத்தவேண்டும், உலக வர்த்தக அமைப்பில் இருந்து விலகவேண்டும், போராட்டத்தின்போது இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.

விவசாயிகள் பேரணியை தொடங்கியதால் டெல்லி எல்லைகளுக்கு போலீசார் சீல் வைத்து பாதுகாப்பை தீவிரப்படுத்தி உள்ளனர். தடையை மீறி டெல்லிக்குள் நுழையும் விவசாயிகளை கைது செய்ய போலீசார் தயாராகிவருகின்றனர். இதனால் டெல்லி எல்லைப்பகுதிகளில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்