விவசாயிகள் தான் இந்தியாவின் பலமே - ராகுல்காந்தி டுவீட்

இந்தியாவை ஒருங்கிணைக்க விவசாயிகள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.

Update: 2023-07-16 11:23 GMT

புதுடெல்லி,

காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் இருந்து சிம்லா செல்லும் வழியில் அரியானா மாநிலம் சோனிபட் மாவட்டத்தில் உள்ள மதினா கிராமத்தில் வேளாண் பணிகள் செய்து கொண்டிருந்த விவசாயிகளுடன் இணைந்து வேலை செய்தார்.

அதேபோல் அவர் டிராக்டர் ஓட்டியபடியே விவசாயிகளுடன் உரையாடினார். அப்போது லேசாக மழை தூரல் விழ அதைப் பொருட்படுத்தாமல் அவர் விவசாயிகளுடன் உரையாடினார்.

இந்த நிலையில், அரியானாவின் சோனிபட் மாவட்டத்தில் விவசாயிகளுடன் இருக்கும் வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் ராகுல்காந்தி பகிர்ந்துள்ளார்.

அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் பலமே விவசாயிகள் தான். அரியானாவின் சோனிபட்டின் மதீனாவில் நான் சஞ்சய் மாலிக் மற்றும் தஷ்பிர் குமார் என்ற இரு சகோதரர்களை சந்தித்தேன். அவர்கள் விவசாயம் செய்து வருகிறார்கள். அவர்கள் இருவரும் சிறுவயதிலிருந்தே நல்ல நண்பர்களாக இருந்துள்ளனர். பல ஆண்டுகளாக ஒன்றாக சேர்ந்து விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து நாங்கள் வயலில் நாற்று நடுவது, விதை விதைப்பது மற்றும் டிராக்டரை பயன்படுத்தி வயலை உழவு செய்வது ஆகிய உதவிகளில் எங்களை ஈடுபடுத்திக் கொண்டோம்.

அவர்களிடம் பல விஷயங்களை சுதந்திரமாக ஆலோசித்தேன். அந்த கிராமத்தில் உள்ள விவசாயத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள் எங்கள் மீது அதிக அன்பு செலுத்தினார்கள். எங்களை அவர்களது குடும்பத்தில் ஒருவராக நினைத்து அவர்கள் வீட்டில் செய்த உணவை எங்களுக்கு வழங்கினார்கள்.

இந்தியாவின் விவசாயிகள் மிகவும் நேர்மையானவர்கள். அவர்களுக்கு எப்படி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதும் தெரியும், அதே நேரத்தில் அவர்களது உரிமைகளை அங்கீகரிக்கவும் தெரியும். அவர்களது உரிமைகளுக்காக மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்தும், குறைந்தபட்ச ஆதார விலை உரிமைக்காவும் உறுதியாக போராடினர்.

அவர்கள் கூறுவதைக் கேட்டால், அவர்களை புரிந்து கொண்டால் நாட்டின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். இந்தியாவை ஒருங்கிணைக்க விவசாயிகள் மிக முக்கிய பங்களிப்பை வழங்கி வருகின்றனர். விவசாயிகளுடன் கலந்துரையாடிய விடியோவுக்கான லிங்க்கையும் பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்