மணிப்பூரில் துணை ராணுவப்படை சின்னத்துடன் போலி வாகனங்கள்
மணிப்பூரில் துணை ராணுவப்படை சின்னத்துடன் போலி வாகனங்கள் இயங்கி வருகின்றன.;
இம்பால்,
மணிப்பூர் மாநிலத்தில் நடந்த கலவரத்தில் 175 பேர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், அங்குள்ள சுரசந்த்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு அசாம் ரைபிள்ஸ் என்ற துணை ராணுவப்படை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மணிப்பூர் பள்ளத்தாக்கு பகுதியை சேர்ந்த சில கிளர்ச்சி குழுக்கள் உதவியுடன் சிலர் சந்தையில் இருந்து எண்ணற்ற லாரிகளை வாங்கி உள்ளனர். அவற்றுக்கு ராணுவம் பயன்படுத்தும் நிறத்தை 'பெயிண்ட்' அடித்து, அசாம் ரைபிள்ஸ் படை சின்னத்தை பொறித்துள்ளனர்.
இதன்மூலம், அசாம் ரைபிள்ஸ் படையின் வாகனம் போல் தோற்றம் கொண்டதாக மாற்றி, கக்சிங் மாவட்டத்தில் இயக்கி வருகின்றனர். இது, அவர்களின் தீய நோக்கத்தை வெளிப்படுத்துகிறது. அவற்றை தேசவிரோத காரியங்களுக்கு பயன்படுத்த வாய்ப்புள்ளது. இத்தகவலை மற்ற மாவட்டங்களின் போலீசாருக்கும் தெரிவித்து உஷார்படுத்துங்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.