பாகிஸ்தான் பாஸ்போர்ட் பெற போலி ஆவணங்கள்; இளம்பெண்ணுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்

2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில், பஷீர் அகமது என்பவருடன் சமூக ஊடகம் வழியே தொடர்பு ஏற்பட்டு, நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தோம் என சனம் கான் கூறியுள்ளார்.

Update: 2024-07-27 20:52 GMT

புனே,

மராட்டியத்தின் தானே மாவட்டத்தில் வசித்து வருபவர் சனம் கான் என்ற நக்மா நூர் மக்சூத் (வயது 23). பாகிஸ்தானுக்கு செல்வதற்கான பாஸ்போர்ட்டை பெறுவதற்காக அவர் போலியான ஆவணங்களை பயன்படுத்தி உள்ளார் என குற்றச்சாட்டு எழுந்தது.

இதுபற்றி தானே போலீசார் கடந்த புதன்கிழமை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அவரை கடந்த வியாழக்கிழமை வர்தக் நகர் காவல் துறையினர் கைது செய்தனர். இதன்பின்னர் நேற்று அவர் தானே கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி கோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

இதுபற்றி சனம் கான் செய்தியாளர்களிடம் கூறும்போது, 2015-ம் ஆண்டில் என்னுடைய பெயரை மாற்றினேன். 2021-ம் ஆண்டு கொரோனா காலத்தில், பஷீர் அகமது என்பவருடன் சமூக ஊடகம் வழியே தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் திருமணம் செய்ய முடிவு செய்தோம்.

எங்களுடைய குடும்பத்தினர் வீடியோ கால் மற்றும் வாய்ஸ் கால் வழியே ஒருவருடன் ஒருவர் தொடர்பு கொண்டனர். 2023-ம் ஆண்டில் எனக்கு பாஸ்போர்ட் கிடைத்தது. விசாவுக்கு விண்ணப்பித்தேன். அனைத்து சட்ட ஆவணங்களையும் சமர்ப்பித்ததும் எனக்கு விசா கிடைத்தது.

விசாரணை நடந்து விட்டால் அனைத்தும் முடிந்து விடும் என என்னிடம் கூறப்பட்டது. ஆனால், என்னால் காவல் நிலையத்திற்கு செல்ல முடியவில்லை. சட்ட முறையிலேயே நான் சென்றுள்ளேன் என்று நான் தெளிவுப்படுத்தி விட்டேன் என சனம் கான் கூறியுள்ளார்.

எனினும், துணை காவல் ஆணையாளர் அமர் சிங் ஜாதவ் கூறும்போது, இந்த விவகாரம் பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர் என கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்