போலி டாக்டர்கள், பறிபோன உயிர்கள்... பெண் உள்பட 4 பேர் கைது; டெல்லியில் அவலம்

4 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ வாரியம் கடந்த 1-ந்தேதி அகர்வாலின் மருத்துவ மையத்தில் ஆய்வு செய்தனர்.

Update: 2023-11-16 22:54 GMT

Image Courtesy:  ndtv

புதுடெல்லி,

டெல்லியில், கிரேட்டர் கைலாஷ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவத்தில் அதிர்ச்சி பின்னணி தெரிய வந்துள்ளது.

இந்த சம்பவத்தில், 2 டாக்டர்கள், அறுவை சிகிச்சை நிபுணராக காட்டி கொண்ட பெண் மற்றும் ஆய்வக ஊழியர் என மொத்தம் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி டெல்லி போலீசார் கூறும்போது, டாக்டர் நீரஜ் அகர்வால், அவருடைய மனைவி பூஜா அகர்வால் மற்றும் டாக்டர் ஜஸ்பிரீத் சிங் ஆகிய 3 பேருடன் ஆய்வக ஊழியர் மகேந்திர சிங் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.

கடந்த ஆண்டு, சிகிச்சைக்காக அஸ்கார் அலி என்பவர் கிளினிக்கில் சேர்க்கப்பட்டார். அவருக்கு அறுவை சிகிச்சை ஒன்று நடத்தப்படும். டாக்டர் ஜஸ்பிரீத் சிங் இதனை மேற்கொள்வார் என அஸ்காரிடம் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அறுவை சிகிச்சைக்கு முன் ஜஸ்பிரீத் சிங்குக்கு பதில், பூஜா மற்றும் மகேந்திரா ஆகியோர் டாக்டர்களாக மாற்றப்பட்டனர். அறுவை சிகிச்சை முடிந்த பின்னர், அஸ்காருக்கு கடுமையான வலி ஏற்பட்டு உள்ளது.

சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் உயிரிழந்து விட்டார் என தெரிவிக்கப்பட்டது. டாக்டர் அகர்வால் மற்றும் மற்ற 3 பேரும் மருத்துவ நடவடிக்கைகளை முறையாக பின்பற்றவில்லை என அஸ்காரின் குடும்பத்தினர் குற்றச்சாட்டு கூறினர்.

போலி ஆவணங்களை கொண்டு, டாக்டர் அகர்வால் அறுவை சிகிச்சைகளை மேற்கொள்கிறார் என புகாராக தெரிவித்தனர்.  2016-ம் ஆண்டில் இருந்து, டாக்டர் அகர்வாலுக்கு எதிராக 9 புகார்கள் எழுந்துள்ளன. 7 புகார்களில், மருத்துவ அலட்சியத்தினால் நோயாளிகள் 7 பேரும் உயிரிழந்து விட்டனர் என போலீசார் தெரிவித்தனர்.

கடந்த 1-ந்தேதி 4 டாக்டர்கள் அடங்கிய மருத்துவ வாரியம் சென்று அகர்வாலின் மருத்துவ மையத்தில் ஆய்வு செய்தனர். இதில், பல குறைபாடுகள் கண்டறியப்பட்டன. நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை ஆகியவற்றுடன் தொடர்புடைய ஆவணங்களை போலியாக உருவாக்குவது தெரிய வந்தது.

தடை செய்யப்பட்ட எண்ணற்ற மருந்துகள், ஊசிகள் கைப்பற்றப்பட்டன. காலாவதியான மருத்துவ உபகரணங்கள், வெவ்வேறு 47 வங்கிகளின் காசோலை புத்தகங்கள், பல்வேறு வங்கிகளின் 54 ஏ.டி.எம். அட்டைகள், அஞ்சலக கணக்கு புத்தகங்கள், 6 கிரெடிட் கார்டு இயந்திரங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்