'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனருக்கு ஜாமீன் வழங்க லக்கிம்பூர் கோர்ட்டு மறுப்பு..!

'ஆல்ட் நியூஸ்' இணை நிறுவனருக்கு ஜாமீன் வழங்க லக்கிம்பூர் கோர்ட்டு மறுப்பு தெரிவித்துள்ளது.;

Update: 2022-07-16 14:32 GMT

லக்னோ,

செய்தியின் உண்மை தன்மையை சரிபார்க்கும் இணையதள நிறுவனமாக 'ஆல்ட் நியூஸ்' செயல்பட்டு வருகிறது. இந்த இணையதள நிறுவனத்தின் இணை நிறுவனராக முகமது ஜூபைர் செயல்பட்டு வருகிறார்.

இதனிடையே, 2018-ல் முகமது ஜூபைர் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு சர்ச்சைக்குரியை வகையில் கருத்து தெரிவித்திருந்தார். இது மத உணர்வை புண்படுத்தும் வகையில் உள்ளதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டெல்லி போலீசார் ஜூபைரை கடந்த மாதம் 28-ம் தேதி கைது செய்தனர். அவரை டெல்லி திகார் சிறையில் போலீசார் அடைத்தனர்.

இந்தச்சூழலில் அவர் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி டெல்லி ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்து இருந்தார். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பளித்த ஐகோர்ட்டு, ஆல்ட் பத்திரிகையாளர் முகமது ஜுபைருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இருப்பினும், இதே விவகாரத்தில் உத்தரப் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள இரு வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர் சிறையிலேயே இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் 18 அன்று இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சனை குறித்த சுதர்சன் சேனலின் தொகுப்பு குறித்து தவறான கருத்து தெரிவித்ததாக ஜூபைர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக லக்கிம்பூர் செசன்ஸ் கோர்ட்டு ஜூபைருக்கு சம்மன் அனுப்பியுள்ளது. அவரை 14 நாட்கள் கோர்ட்டு காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கில் ஜாமீன் வழங்க கோரி ஜூபைர் தாக்கல் செய்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு ஜாமீன் வழங்க மறுத்துள்ளது.

இதுகுறித்து முகமது ஜூபைரின் வக்கீல் ஹர்ஜித் சிங் கூறும்போது, ஜாமீன் மனு ஆங்கிலத்தில் தாக்கல் செய்யப்பட்டதற்காக புகார்தாரர் ஆட்சேபனை தெரிவித்ததாகவும், அதன் காரணமாக விசாரணை ஒத்திவைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். முகமது ஜூபைர் மீது டெல்லியில் ஒன்று உத்தரப்பிரதேசத்தில் 6 என மொத்தம் 7 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்