டெல்லியில் கடும் குளிர்; நெருப்பு மூட்டியதில் மூச்சு திணறல்... !! 6 பேர் உயிரிழந்த சோகம்
டெல்லியின் இந்திராபுரி பகுதியில் தூங்கி கொண்டிருந்த 2 இளைஞர்கள் இதேபோன்று மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளனர்.;
புதுடெல்லி,
டெல்லியில் குளிரை முன்னிட்டு நெருப்பு மூட்டியதில், புகை பரவி மூச்சு திணறல் ஏற்பட்டு பல்வேறு பகுதிகளை சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சோக சம்பவம் ஏற்பட்டு உள்ளது.
இதில், முதல் சம்பவத்தில், வடக்கு டெல்லிக்கு உட்பட்ட பகுதியில் அலிப்பூர் காவல் நிலையத்தின் கீழ் அமைந்த கெடா கலான் கிராமத்தில் வீடு ஒன்றில் தூங்கி கொண்டிருந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் சென்றது.
இதில் கணவன், மனைவி மற்றும் அவர்களின் 2 குழந்தைகள் என 4 பேர் தூங்கும்போது மூச்சு திணறி இறந்துள்ளனர். லாரி ஓட்டுநரான ராகேஷ் திங்கர் (வயது 40), அவருடைய மனைவி லலிதா தேவி (வயது 38) மற்றும் 8 மற்றும் 7 வயதுகளை கொண்ட முறையே பியுஷ் மற்றும் சன்னி ஆகிய 2 குழந்தைகள் என 4 பேரும் அடையாளம் காணப்பட்டனர்.
அவர்கள் குளிரை போக்க நெருப்பு மூட்டி வைத்துள்ளனர். ஆனால், அதிக புகை பரவியதில் மூச்சு திணறல் பாதிப்பு ஏற்பட்டு, அவர்கள் உயிரிழந்துள்ளனர் என கூறப்படுகிறது. எனினும், பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பின்னரே உண்மையான காரணம் தெரிய வரும் என போலீசார் கூறினர்.
டெல்லியின் இந்திராபுரி பகுதியில் தூங்கி கொண்டிருந்த 2 இளைஞர்கள் இதேபோன்று மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்து உள்ளனர். அவர்கள் அபிஷேக் மற்றும் ராம் பகதூர் என அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதனால், டெல்லியில் 6 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அதிரச்சி ஏற்படுத்தி உள்ளது.