கலவரம் பாதித்த மணிப்பூரில் வெடிகுண்டுகள், நவீன ரக துப்பாக்கிகள் பெருமளவில் பறிமுதல்
மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திர தன்மை ஏற்படுவதற்காக ராணுவம், ரைபிள் படை இணைந்து நடத்திய சோதனையில் வெடிகுண்டுகள், நவீன ரக ஆயுதங்கள் பெருமளவில் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.;
இம்பால்,
மணிப்பூரில் மெய்தெய் என்ற மெஜாரிட்டி சமூகத்தினரை எஸ்.டி. பிரிவில் சேர்ப்பதற்கு ஆதரவாக கடந்த ஏப்ரலில், ஐகோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருந்தது.
இதனை தொடர்ந்து, தங்களை எஸ்.டி. பிரிவில் சேர்க்க கோரி மே மாத தொடக்கத்தில் அவர்கள் கும்பலாக பேரணி நடத்தினர். இதற்கு எதிராக குகி பழங்குடியினரும் பேரணி நடத்தினர். இதில், இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அது வன்முறையாக வெடித்தது.
இதில், 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர். 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
கலவரக்காரர்களை அடக்க இந்திய ராணுவம் மற்றும் துணை ராணுவ படைகள் கூடுதலாக குவிக்கப்பட்டன. வன்முறை பற்றி முதல்-மந்திரி பைரன் சிங்கிடம், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தொலைபேசி வழியே கேட்டறிந்து உள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை மணிப்பூருக்கு நேரில் சென்ற மந்திரி அமித்ஷா, தலைநகர் இம்பால், காங்போக்பி, மோரே, சுராசந்த்பூர் உள்ளிட்ட நகரங்களில் நிவாரண முகாம்களை பார்வையிட்டார். இதன்பின், குகி, மெய்தய் உள்ளிட்ட சமூக உறுப்பினர்களை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து பாதுகாப்பு படையினருடனான சந்திப்பை கடந்த புதன்கிழமை நடத்தினார்.
இதில், மணிப்பூரின் அமைதி மற்றும் வளம் நம்முடைய முக்கிய முன்னுரிமையான விசயம் என அவர் கூறினார். மாநில அமைதியை குலைக்கும் எந்தவொரு செயலுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
கடந்த வாரம் ஞாயிறன்று, ஒரு காவல் உயரதிகாரி உள்பட 5 பேர் படுகொலை செய்யப்பட்டனர். பா.ஜ.க. எம்.எல்.ஏ. ஒருவரின் வீடு சூறையாடப்பட்டது. ரைபிள் படை பிரிவின் ஆயுத கிடங்கில் இருந்து ஆயிரம் ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கும்பலால் கொள்ளையடிக்கப்பட்டும் இருந்தன.
இந்த பறிமுதல் செய்த ஆயுதங்களை வைத்திருக்கும் அனைவரும் அவற்றை திருப்பி ஒப்படைக்கும்படி பாதுகாப்பு படையினர் மீண்டும் இன்று வேண்டுகோளாக கேட்டு கொண்டனர். மத்திய மந்திரி அமித்ஷாவின் உத்தரவின்படி, மணிப்பூரில் அமைதி மற்றும் ஸ்திர தன்மை திரும்புவதற்காக இவற்றை விரைவில் ஒப்படைக்க கேட்டு கொள்ளப்பட்டது.
அப்படி செய்ய தவறினால், அந்த நபர்கள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கையும் விடுத்து உள்ளது.
இந்த சூழலில், மணிப்பூரில் இருந்து பெருமளவிலான ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை படையினர் பறிமுதல் செய்து உள்ளன என பாதுகாப்பு படையின் செய்தி தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் மகேந்திர ராவத் கூறியுள்ளார்.
இதற்காக ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவினர், போலீஸ் மற்றும் மத்திய ஆயுத போலீஸ் படையினருடன் இணைந்து கூட்டாக நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதில், 40 ஆயுதங்கள் (தானியங்கிகள்), வெடிபொருள் மற்றும் போர் கருவிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
எனினும், இந்த அதிரடி சோதனையில் பொதுமக்களின் தனிநபர் பாதுகாப்பு எந்த வகையிலும் பாதிக்கப்படாமல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.