புனேவில் 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்காட்சி - மத்திய தொழில்துறை மந்திரி பங்கேற்பு

வேளாண் தொழில் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும் என்று மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.;

Update: 2022-08-20 18:27 GMT

புனே,

மத்திய அறிவியல் தொழிலக ஆராய்ச்சிக் கழகத்தின் தகவல் சாதனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பிரிவின் புதிய கட்டடம், மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் உள்ள தேசிய வேதியியல் ஆய்வக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை மந்திரி ஜிதேந்திர சிங் திறந்து வைத்தார்.

இதையொட்டி சுகாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல்மயமாக்கல் மற்றும் தானியங்கிமயமாக்கல் போன்ற துறைகள் சார்ந்த 30 ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் கண்காட்சி நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனத்தினருடன் மத்திய மந்திரி கலந்துரையாடினார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், உலகின் முதலாவது புகையில்லா சானிடரி பேட் அகற்றும் சாதனம் மற்றும் மறுசுழற்சி முறையை உருவாக்கவும், இரட்டை ஆற்றல் வசதி கொண்ட இருகட்ட டி-ஃபைபிரில்லேட்டர்களை உருவாக்கவும், ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு தாராளமாக நிதியுதவி வழங்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும் வேளாண் துறை சார்ந்த இயற்கை எரிவாயு தயாரிப்பு நிறுவனங்களுடன் கலந்துரையாடிய ஜிதேந்திர சிங், பாசன மேலாண்மையை திறன் வாய்ந்ததாக மாற்றி, அதிக விளைச்சலுக்கு வழிவகுக்கக் கூடிய சென்சார் தொழில்நுட்பம் மற்றும் அனைத்துப் பருவநிலைகளுக்கும் தாக்குப் பிடிக்கக் கூடிய, பூச்சி மற்றும் நோய் எதிர்ப்புத் திறன்கொண்ட பயிர்களை உருவாக்க வேளாண் தொழில் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான நிதியுதவி அதிகரிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்