சிபிஐ கைது செய்த வழக்கில் ஜாமீன் கோரி அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல்

அரவிந்த கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் வரும் 12ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.;

Update: 2024-07-03 12:09 GMT

புதுடெல்லி,

மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து மக்களவை தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. ஜாமீன் முடிவடைந்து கடந்த மாதம் 2ம் தேதி மீண்டும் திகார் சிறையில் கெஜ்ரிவால் ஆஜரானார்.

இதையடுத்து, சிறையில் இருந்த கெஜ்ரிவாலை கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கில் சிபிஐ தன்னை கைது செய்ததை எதிர்த்து கெஜ்ரிவால் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த கோர்ட்டு இது தொடர்பாக 7 நாட்களுக்குள் பதிலளிக்குமாறு சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும் வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணையை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், சிபிஐ கைது செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரியும், இந்த வழக்கை அவசர வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வழக்கறிஞர் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவை நாளை மறுநாள் (அதாவது 5ம் தேதி) விசாரிப்பதாக டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, அரவிந்த கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், காணொலி மூலம் அவர் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நீதிபதி காவேரி பவேஜா, அவரது காவலை வரும் 12ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்