அதிகாரிகளுடன் சந்திப்பை அதிகரிக்க கோரிய அரவிந்த் கெஜ்ரிவாலின் மனு தள்ளுபடி

அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கடந்த மாதம் 21-ம் தேதி கைது செய்தது.

Update: 2024-04-10 10:38 GMT

புதுடெல்லி,

டெல்லி மதுபான கொள்கை முறைகேட்டில் நடந்த சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மாதம் 21-ந்தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

பின்னர், அமலாக்கத்துறை காவலில் வைத்து 10 நாட்கள் விசாரிக்கப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற காவலில் டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், அரசு அதிகாரிகளுடனான சந்திப்பை வாரத்துக்கு 5 ஆக அதிகரிக்கக் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் இரண்டு முறை அரசு அதிகாரிகளை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டிருக்கும் நிலையில், அதனை 5 முறை சந்திப்பு நடத்தும் வகையில் அதிகரிக்க வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, புதுடெல்லி அரசில் இருக்கும் பணிப் பளுவுக்கு ஏற்ப, அரசு அதிகாரிகளுடனான சந்திப்பை அதிகரிக்க வேண்டும் என்று அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. எனினும், அரவிந்த் கெஜ்ரிவாலின் இந்த மனுவை டெல்லி ஐகோர்ட்டு நிராகரித்துவிட்டது. சிறைக்குள் இருந்து அரசாங்கத்தை நடத்த வேண்டும் என்பதற்காக அவருக்கு சிறப்பு சலுகைகளை வழங்க முடியாது என்று கோர்ட்டு கூறிவிட்டது.

முன்னதாக, பஞ்சாப் முதல்-மந்திரி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், பாதுகாப்புக் கருதி, அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று சிறை நிர்வாகம் கூறிவிட்டது. சந்திப்புக்கு மற்றொரு நாள் கொடுப்பதாகவும் தெரிவித்துவிட்டது. வழக்கமாக சிறை வருகையாளர்கள் வரும் வழியில் வந்து, இரண்டு இரும்புக் கம்பி தடுப்புகள் இடையே இருக்கும் வகையில், பகவந்த் மன், அரவிந்த் கெஜ்ரிவாலை சந்திக்கலாம் என்று கடந்த வாரம் திகார் சிறை நிர்வாகம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்