உலக அளவில் இந்தியாவின் பலம் அதிகரித்துள்ளது- ரவிசங்கர் பிரசாத்

எங்கெல்லாம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு தவிக்கிறார்களோ, அவர்களின் கண்ணீரை துடைப்பதற்காக இந்திய அரசு பணியாற்றுவதாக ரவிசங்கர் பிரசாத் கூறினார்.

Update: 2024-02-14 07:45 GMT

பாட்னா:

கத்தார் நாட்டில் உளவு பார்த்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய முன்னாள் கடற்படை வீரர்கள் 8 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தண்டனையை எதிர்த்து கத்தார் நாட்டு உயர் நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

மேலும் கத்தார் இளவரசரை பிரதமர் மோடி சந்தித்தபோது, 8 இந்தியர்களின் மரண தண்டனையை மறுபரிசீலனை செய்யும்படி கோரிக்கை வைத்தார். இதுதொடர்பாக இருதரப்பு உயர் அதிகாரிகளும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் மேல்முறையீட்டு வழக்கில் 8 பேரின் மரண தண்டனை சிறை தண்டனையாக குறைக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டனர். சமீபத்தில் நாடு திரும்பிய அவர்கள், பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தனர்.

இந்நிலையில், பா.ஜ.க.வின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான ரவி சங்கர் பிரசாத், பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கத்தார் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பிய முன்னாள் கடற்படை வீரர்கள் பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்கள். பிரதமரின் தனிப்பட்ட முயற்சியால் தங்களின் விடுதலை சாத்தியமானதாக அவர்கள் கூறினர். உலகில் இந்தியாவின் பலம் அதிகரித்திருப்பதையே இது காட்டுகிறது.

எங்கெல்லாம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டு தவிக்கிறார்களோ, அவர்களின் கண்ணீரை துடைப்பதற்காக இந்திய அரசு பணியாற்றுகிறது. உக்ரைனில் சிக்கித் தவித்த இந்தியர்கள், ஆப்கானிஸ்தானில் தவித்த இந்துக்கள், பாகிஸ்தானிடம் பிடிபட்ட இந்திய விமானப்படை பைலட் அபினந்தன் ஆகியோரை மோடி அரசு பத்திரமாக மீட்டு கொண்டு வந்துள்ளது.

பிரதமர் மோடி சொல்வதை உலகம் கவனிக்கிறது. இதுமட்டுமல்லாமல், பிரதமர் மோடிக்கு 6-க்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகள் நாட்டின் உயரிய விருதுகளை வழங்கி உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்