எல்லாம் கடவுளின் செயல்: குஜராத் பால விபத்து பற்றி கோர்ட்டில் குறிப்பிட்ட மேலாளர்

குஜராத் பால பராமரிப்பு பணிக்கு நேரடியாக ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் துருப்பிடித்த கேபிள்கள் மாற்றப்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

Update: 2022-11-02 11:38 GMT



காந்திநகர்,


குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே அமைந்த 100 ஆண்டுகள் பழமையான தொங்கு பாலம் 8 மாத கால பராமரிப்பு பணிக்கு பின்பு, கடந்த 26-ந்தேதி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்பட்டது.

ஆனால், 5 நாட்களில் பாலம் திடீரென கடந்த 30-ந்தேதி மாலை இடிந்து விழுந்து பேரழிவை ஏற்படுத்தியது. பால விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என 135 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம் ஏற்பட்டு உள்ளது. 177 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். சிலர் சிகிச்சையில் உள்ளனர்.

பிரதமர் மோடி மற்றும் குஜராத் முதல்-மந்திரி சார்பில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது. குஜராத் பால விபத்து நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் குஜராத்தின் காந்திநகரில் உயர்மட்ட ஆலோசனை கூட்டமும் நடத்தப்பட்டது.

இதன்பின்பு, சம்பவ பகுதிக்கு பிரதமர் மோடி நேற்று நேரில் சென்று பார்வையிட்டார். இந்த வழக்கில் 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுபற்றி கூடுதல் அரசு வழக்கறிஞரான, எச்.எஸ். பஞ்சால் செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார்.

அவர் கூறும்போது, ஒரேவா நிறுவனத்தின் 2 மேலாளர்களில் ஒருவர் (கைது செய்யப்பட்டவர்கள்) கோர்ட்டில் கூறும்போது, இது கடவுளின் ஒரு செயல் என குறிப்பிட்டார் என்ற திடுக்கிடும் தகவலை தெரிவித்து உள்ளார்.

இதுதவிர, வழக்கில் பல்வேறு திடுக் தகவல்கள் வெளிவந்து உள்ளன. தொங்கு பாலத்தின் கேபிள் வயர்கள் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதற்கு ஏற்ற வகையில் இல்லை. அது துருப்பிடித்து காணப்பட்டது.

இதுபற்றி தடய அறிவியல் ஆய்வக அறிக்கையில் உள்ள தகவலில், விசாரணை அதிகாரி கூறும்போது, பாலத்தின் கேபிள் வயரானது துருப்பிடித்து இருந்தது. பாலத்தின் தரைப்பகுதி மட்டுமே சீர்செய்யப்பட்டு இருந்தது. கேபிள்கள் மாற்றப்படவில்லை.

எண்ணெய், கிரீஸ் போன்ற பொருட்களை பயன்படுத்தி கேபிள் வயர்களை இலகுவாக ஆக்கும் பணிகள் எதுவும் நடைபெறவில்லை என கூறியுள்ளார். பாலத்தில் இருந்தது மிக பழைய கேபிள் என முதல் கட்ட விசாரணை நிறைவில் அந்த அதிகாரி தெரிவித்து உள்ளார்.

இந்த வழக்கில் போலீஸ் காவலுக்கு இன்று கொண்டு செல்லப்பட்டவர்கள் பற்றி பஞ்சால் கூறும்போது, 4 பேரில் 2 பேர் ஒரேவா நிறுவனத்தின் மேலாளர்கள். மற்ற 2 பேர் பால பணியில் ஈடுபட்டவர்கள்.

நீதிமன்ற காவலுக்கு கொண்டு செல்லப்பட்ட 5 பேர், பாதுகாவலர்கள் மற்றும் கட்டண சீட்டு வழங்கியவர்கள் ஆவர் என கூறியுள்ளார்.

இந்த பால பராமரிப்பு பணியில், டெண்டர் விடும் நடைமுறையானது பின்பற்றப்படவில்லை. அதற்கு பதிலாக, நேரடியாக ஒப்பந்தம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என விசாரணை அதிகாரி அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளார் என்றும் பஞ்சால் கூறியுள்ளார். இதன்படி, கைது செய்யப்பட்ட 9 பேரும் வருகிற 5-ந்தேதி வரை காவலில் வைத்து விசாரிக்கப்பட உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்