எல்லோரும் பசுவில் இருந்து பால் கறக்கலாம் ஆனால் நாங்கள் காளை மாட்டில் இருந்தே பால் கறந்து விட்டோம் - அரவிந்த் கெஜ்ரிவால்

எல்லோரும் பசுவில் இருந்து பால் கறக்கலாம் ஆனால் நாங்கள் காளை மாட்டில் இருந்தே பால் கறந்து விட்டோம் என குஜராத் வெற்றி குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

Update: 2022-12-19 13:57 GMT

புதுடெல்லி,

டெல்லி முதல்-மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், அக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார். இந்த கூட்டத்தில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தநிலையில் தேசிய கவுன்சில் கூட்டத்தில் உரையாற்றிய அரவிந்த் கெஜ்ரிவால்,

" கடந்த ஓராண்டில் நாம் பஞ்சாப்பில் ஆட்சியை கைப்பற்றினோம். டெல்லி மாநகராட்சியை வென்று விட்டோம். கோவாவில் 2 எம்எல்ஏக்கள் ஜெயித்துள்ளார்கள். குஜராத்தில் 5 எம்எல்ஏக்கள், 13 சதவீத வாக்குவங்கியை பெற்றுள்ளோம். இதில் குஜராத்தில் பெற்ற வெற்றி சாதாரணமானது அல்ல. சிலர் என்னிடம், நீங்கள் குஜராத்தில் பால் கறக்கும் காளையை எடுத்து வந்துள்ளீர்கள் என பாராட்டினர். அந்த அளவுக்கு கடினமான வெற்றி இது.

பசுவில் பால் கறக்க அனைவராலும் முடியும். ஆனால், குஜராத்தில் 5 சீட்டுகள், 14 சதவீதம் வாக்குகள் பெற்று நாங்கள் காளை மாட்டில் பால் கறந்துள்ளோம். இதற்காக குஜராத் மக்களுக்கு நன்றி. எனவே கட்சியினர் கவலைப்பட வேண்டாம், 2027-ல் நாம் குஜராத்தில் நிச்சயம் ஆட்சி அமைப்போம்" என்றார்.

மேலும் சீன பொருட்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மோடி அரசை கடுமையாக சாடிய அவர், ராணுவ வீரர்களின் உயிர் மீது அரசுக்கு அக்கறை இல்லை என குற்றம்சாட்டினார். தொடர்ந்து அவர் கூறுகையில், இந்திய மக்களை விரட்டி அடிக்கும் பாஜக அரசு, சீன மக்களை கட்டிப்பிடிக்கிறது. வியாபாரிகள், தொழிலதிபர்கள் இந்தியாவை விட்டு வெளியேறி வருகின்றனர். ஒரு கட்சி ஊழலில் சிக்கியுள்ளது, மற்றொரு கட்சி குண்டர்களை ஊக்குவிக்கிறது மற்றும் குண்டர்களுக்கு அடைக்கலம் அளிக்கிறது என பாஜக அரசை விமர்சித்தார்.

182 இடங்களை கொண்ட குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி மெகா வெற்றி பெற்றது. எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு 17 இடங்கள் மட்டுமே கிடைத்தது. அதேவேளை, புதுமுகமாக களமிறங்கிய ஆம் ஆத்மி 5 இடங்களில் வென்றது. இந்த முறைதான் குஜராத் தேர்தல் களமானது பாஜக-காங்கிரஸ் என்ற நேரடி போட்டியில் இருந்து மும்முனை தேர்தல் களமாக அமைந்தது.

Tags:    

மேலும் செய்திகள்