உண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்ட தேர்தல் ஆணையத்துக்கு தெரியவில்லை - உத்தவ் தாக்கரே
உண்மையான சிவசேனா யார் என்பது கண்புரை நோயால் பாதிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணையத்திற்கு தெரியவில்லை என உத்தவ் தாக்கரே கடுமையாக விமர்சித்துள்ளார்.;
உத்தவ் அணிக்கு பின்னடைவு
மகா விகாஸ் அகாடி அரசு சிவசேனா கட்சி தலைவர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் அதிருப்தியால் கவிழ்ந்தது. உத்தவ் தாக்கரே முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். இதைத்தொடர்ந்து சிவசேனா கட்சி 2 ஆக பிளவு பட்டது. இந்தநிலையில் உத்தவ் தாக்கரே அணிக்கு பெரிய பின்னடைவாக இந்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் ஆணையம் சிவசேனா பெயரையும், அதன் தேர்தல் சின்னமான "வில் அம்பையும் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு ஒதுக்கியது. இந்தநிலையில் ஜல்காவ் மாவட்டம் பச்சோராவில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி தலைவர் உத்தவ் தாக்கரே பேசியதாவது:-
48 இடங்கள்
உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சிக்கு மக்கள் அளித்துவரும் ஆதரவை பார்த்தால் உண்மையான சிவசேனா யாருக்கு சொந்தமானது என்பதை பாகிஸ்தான் கூட சொல்லும், ஆனால் தேர்தல் ஆணையம் கண்புரை நோயால் அவதிப்படுவதால் அவர்களால் அதை சொல்ல முடியவில்லை.
எனது கட்சியின் சின்னமான சுடர்விடும் ஜோதியானது முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே மற்றும் பா.ஜனதாவின் சிம்மாசனத்தை எரித்துவிடும். துரோகத்தால் உருவாக்கப்பட்ட மாநிலத்தின் கறைகளை நாங்கள் சுத்தப்படுத்துவோம். மராட்டியம் துணிச்சலுக்கான நிலம் துரோகிகளுடையது இல்லை.
ஏக்நாத் ஷிண்டே கட்சிக்கு மொத்தமுள்ள 288 இடங்களில் 48 இடங்கள் ஒதுக்கப்படும் என்று பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் சந்திரசேகர் பவான்குலே கூறியுள்ளார். ஆனால் பா.ஜனதா வெறும் 48 இடங்களில் மட்டுமே போட்டியிடும் நபரின் தலைமையின் கீழ் போட்டியிடுமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
துரோகிகளை தோற்கடிக்கமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்க மாநிலம் முழுவதும் நான் பயணிப்பேன்.
இந்துத்வா என்றால் என்ன?
இந்துத்வா என்றால் என்ன என்பதை பா.ஜனதா தெளிவுபடுத்த வேண்டும். இந்துத்வா என்றால் நாட்டின் சில பகுதிகளில் மட்டும் பசுவதை தடை சட்டத்தை கொண்டுவருவது, பெண்கள் மீதான தாக்குதலை மேற்கொள்வது மற்றும் பசுவின் இறைச்சியை எடுத்து சென்றதாக கூறி மக்களை கொலை செய்வதா?
இது பா.ஜனதாவின் அரசியல் பயங்கரவாதமாகும். அவர்கள் எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து கட்சியில் சேருமாறு கட்டாயப்படுத்துகிறார்கள்.
ஆனால் அத்தகைய தலைவர்கள் கட்சிகள் சேர்ந்தவுடன் அந்த ஊழல்வாதிகள் தூய்மையானவர்களாக மாறி விடுகின்றனர். அதேநேரம் அவர்கள் சொந்த கட்சியில் உள்ள நல்லவர்களின் அரசியல் வாழ்க்கை அழிக்கப்படுகிறது.
பா.ஜனதாவுக்கும் அவர்களின் கூட்டணி கட்சிகளுக்கும், சொந்த கட்சியில் உள்ள நல்லவர்கள் தேவையில்லை. இது என்ன வகையான அரசியல் என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.