பா.ஜ.க.வில் இருந்து விலகும் முடிவை கைவிட்ட ஈசுவரப்பா

பா.ஜனதா மேலிடம் எச்சரிக்கை விடுத்ததால் கட்சியை விட்டு விலகும் முடிவை கைவிட்ட ஈசுவரப்பா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், மந்திரி பதவி கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-20 18:45 GMT

பெங்களூரு:

பா.ஜனதா மேலிடம் எச்சரிக்கை விடுத்ததால் கட்சியை விட்டு விலகும் முடிவை கைவிட்ட ஈசுவரப்பா பரபரப்பு பேட்டி அளித்துள்ளார். அதில், மந்திரி பதவி கிடைக்கும் என நம்பிக்கை இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மூத்த தலைவர் ஈசுவரப்பா

கர்நாடக பா.ஜனதாவில் மூத்த தலைவராக இருப்பவர் ஈசுவரப்பா. சிவமொக்கா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு எம்.எல்.ஏ.வாக தேர்வான இவர் கட்சியின் மாநில தலைவராகவும், பல்வேறு துறைகளின் மந்திரியாகவும் பணியாற்றி இருக்கிறார். இவர் பசவராஜ்பொம்மை தலைமையிலான மந்திரி சபையில் பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராம பஞ்சாயத்து துறை மந்திரியாக பதவி வகித்தார்.

இந்த நிலையில் பெலகாவி மாவட்டத்தை சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் பட்டீல் உடுப்பியில் உள்ள ஒரு தங்கும் விடுதியில் தற்கொலை செய்து கொண்டார். அவர் தான் டெண்டர் எடுத்து செய்த பணிகளுக்கான தொகையை விடுவிக்க மந்திரி ஈசுவரப்பா 40 சதவீத கமிஷன் கேட்பதாக குற்றச்சாட்டை கூறி தற்கொலை செய்து கொண்டார்.

கட்சியை விட்டு விலக முடிவு

இதையடுத்து ஈசுவரப்பா தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதன் பிறகு கட்சியில் தன்னை ஓரங்கட்டுவதாக அவர் கருதினார். இதனால் அவர் அதிருப்தியில் இருந்து வருகிறார். இந்த நிலையில் ஈசுவரப்பா நேற்று அவசர பத்திரிகையாளர்கள் கூட்டத்தை பெங்களூருவில் கூட்டி இருந்தார். அதில், மந்திரி பதவி கிடைக்காததால், முன்பு போல் அவர் கட்சியை விட்டு விலகி ஏதாவது ஒரு அமைப்பை தொடங்குவது குறித்து அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. கர்நாடக அரசியலில் ஈசுவரப்பாவின் இந்த நடை பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால், கட்சி மேலிட தலைவர்கள் எச்சரிக்கை விடுத்த காரணத்தால் அவர் கட்சியை விட்டு விலகும் முடிவை கைவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருப்பதால், அடுத்தக்கட்ட முடிவை தற்போதைக்கு அறிவிக்கவில்லை. இதுகுறித்து முன்னாள் மந்திரி ஈசுவரப்பா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நான் குற்றமற்றவன்

என் மீது 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து நான் மந்திரி பதவியை ராஜினாமா செய்தேன். இதுகுறித்து விசாரணை நடைபெற்றது. இதில் நான் குற்றமற்றவன் என்று போலீசார் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆகிவிட்டது. இதுவரை என்னை மந்திரிசபையில் மீண்டும் சேர்க்கவில்லை. அதற்காக நான் காத்திருக்கிறேன்.

சித்தராமையா ஆட்சியில் போலீஸ் மந்திரியாக இருந்த கே.ஜே.ஜார்ஜ் மீது மடிகேரி போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலை தொடர்பாக குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது. அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். போலீஸ் விசாரணையில் அவர் மீது தவறு இல்லை என்று தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு மீண்டும் மந்திரி பதவி வழங்கப்பட்டது. அதேபோல் எனக்கு மந்திரி பதவி வழங்கப்படவில்லை.

மந்திரி பதவி கிடைக்கும்

கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியை வலுப்படுத்தியவர்களில் நானும் ஒருவன். பகல்-இரவு என்று பார்க்காமல் கட்சிக்காக உழைத்தேன். இன்று (நேற்று) முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி அளிக்கையில், எனக்கும், ரமேஷ் ஜார்கிகோளிக்கும் மீண்டும் மந்திரி பதவி வழங்குவதாக உறுதி அளித்துள்ளார். இதுகுறித்து கட்சி மேலிட தலைவர்களிடமும் பேசி இருப்பதாக கூறி இருக்கிறார். அதனால் எனக்கு மீண்டும் மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக தற்போதைக்கு நான் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க மாட்டேன். கட்சி மேலிட தலைவர்களின் முடிவுக்காகவும் காத்திருக்கிறேன். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு பிறகு நான் அடுத்தக்கட்ட முடிவை அறிவிப்பேன். நான் ஏதாவது கூறினால் அது கட்சியில் கருத்து வேறுபாடு, கோஷ்டிகள் உள்ளது என்று மக்களுக்கு தகவல் செல்லும். அதனால் எனக்கு மந்திரி பதவி கிடைக்கவில்லை என்பதை கட்சிக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் எனது கருத்தை தெரிவிப்பதற்காகவே நான் இந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பை நடத்துகிறேன்.

கருத்துகளை கூறுகிறேன்

குஜராத் தேர்தல் நிறைவடைந்ததும் மந்திரிசபை விரிவாக்கம் நடைபெறும் என்று நான் நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. அதனால் எனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த கருத்துகளை கூறுகிறேன். குற்றச்சாட்டில் இருந்து என்னை விடுவித்த பிறகு மந்திரி பதவி வழங்குமாறு கட்சியின் தலைவர்களிடம் நான் கேட்கவில்லை. ஆனால் மந்திரி பதவி கிடைக்கும் என்ற நம்பிக்கை இருந்தது.

இவ்வாறு ஈசுவரப்பா கூறினார்.

ராயண்ணா பிரிகேட் அமைப்பை தொடங்கியவர்

கடந்த 2012-ம் ஆண்டு எடியூரப்பாவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக ஈசுவரப்பா முன்பு கட்சியில் இருந்து கொண்டே, ராயண்ணா பிரிகேட் என்ற ஒரு அமைப்பை தொடங்கி அதனை பலப்படுத்தினார். அப்போது மத்தியில் பா.ஜனதா ஆட்சி இருக்கவில்லை. ஈசுவரப்பாவின் செயலால் பா.ஜனதாவுக்கு பின்னடைவு ஏற்படும் நிலை உண்டானது. அவரை சமாதானப்படுத்தி அந்த அமைப்பை மேலிட தலைவர்கள் கலைக்க செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்