ஏர் மொரீஷியஸ் விமானத்தில் இயந்திர கோளாறு; பயணிகளுக்கு மூச்சு திணறல்
விமானத்தில் இருந்த முதியவர் மற்றும் குழந்தைகள் என பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.
புனே,
மும்பையில் இருந்து மொரீஷியஸ் நோக்கி எம்.கே.749 என்ற எண் கொண்ட ஏர் மொரீஷியஸ் விமானம் ஒன்று புறப்பட தயாரானது. விமானம் அதிகாலை 4.30 மணிக்கு புறப்பட வேண்டும். அதனால், பயணிகள் அதிகாலை 3.45 மணியளவில் விமானத்தில் ஏறினர்.
ஆனால், விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால், பயணிகள் 5 மணிநேரம் வரை விமானத்தில் தொடர்ந்து காத்திருந்தனர்.
அவர்கள் கீழே இறங்க அனுமதிக்கப்படவில்லை. அந்த விமானத்தில் ஏ.சி. சரியாக வேலை செய்யவில்லை என கூறப்படுகிறது. இதனால், பானுதத் பூலாவுகி என்ற 78 வயது பயணி மற்றும் பல குழந்தைகள் என பலருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு உள்ளது.
இந்த சூழலில், விமானம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. பிற தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என பயணி ஒருவர் கூறினார்.