கர்நாடகாவில் மழைநீர் வடிகால் ஆக்கிரமிப்பு; பிரபல தொழில்நுட்ப நிறுவனம் ஒப்புதல்

கர்நாடகாவில் மழைநீர் வடிகால் கால்வாய் ஆக்கிரமிப்பை பிரபல தொழில்நுட்ப நிறுவனம் ஒப்பு கொண்டுள்ளது.

Update: 2022-09-15 02:35 GMT


பெங்களூரு,


கர்நாடகாவில் பருவகால மழைகாலத்தில் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியது. எனினும், கனமழையால் சாலைகள் நீரில் மூழ்கின. வாகன போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. மழைநீர் பல்வேறு இடங்களில் தேங்கி நின்றது. அவை வெளியேறுவதற்கு வழியில்லாத சூழல் ஏற்பட்டது.

கனமழையால், கடந்த வாரம் முழுவதும் பெங்களூரு நகரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழைநீர் வடிந்து செல்ல முடியாத சூழலில், பிரபல தகவல் தொழில்நுட்ப பணியாளர்கள், டிராக்டர் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்ததும் நினைவுகூரத்தக்கது.

இதுபற்றி கடந்த மாதம் பெங்களூரு அரசு நிர்வாகம் மேற்கொண்ட ஆய்வில் பல ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன. பெங்களூருவில் இதுபோன்று 700 மழைநீர் வடிகால் கால்வாய் பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன என்பதும், பெரிய கட்டுமான தொழிலதிபர்கள், தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை வருகின்றன என்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இவற்றில் விப்ரோ, பிரெஸ்டிஸ், ஈகோ ஸ்பேஸ், கொலம்பியா ஆசியா மருத்துவமனை, திவ்யஸ்ரீ வில்லாக்கள் (குடியிருப்புகள்) மற்றும் பக்மானே தொழில்நுட்ப பூங்கா உள்ளிட்ட 15 நிறுவனங்களின் பெயர்கள் தெரிய வந்துள்ளன.

இதன்படி 149 குடியிருப்புகளை கொண்ட பூர்வாங்கரா பூர்வா பார்க் ரிட்ஜ் அடுக்குமாடி குடியிருப்புகள், இந்த மழைநீர் வடிந்து செல்லும் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

இதேபோன்று, போயிங், அசெஞ்சர், ஈ.ஒய்., டெல் மற்றும் எரிக்சன் உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் செயல்பட்டு வரும் தி பக்மானே உலக தொழில்நுட்ப மையமும், கிழக்கு பெங்களூருவில் ஆக்கிரமிப்பில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

இதுபற்றி அந்த மையத்தின் பொது மேலாளர் ஜி.பி. சக்ரவர்த்தி கூறும்போது, ஆம். மழைநீர் வடிகால் கால்வாய் பகுதியில் ஸ்லாப்புகளை போட்டு மறைத்து உள்ளோம் என கூறியுள்ளார். ஆனால், மகாதேவபுரா ஏரியில் இருந்து வெளியேறி வரும் நீரை நிறுத்தவே நாங்கள் இதனை மேற்கொண்டோம்.

இதனை செய்யாவிட்டால், பக்மானே மையம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்து விடும். இந்த விசயத்தில் முக்கிய குற்றவாளி பூர்வாங்கரா பூர்வா பார்க் ரிட்ஜ் குடியிருப்புகளே ஆகும். அவர்களே மழைநீர் வடிகால் கால்வாய் பகுதியை ஆக்கிரமித்துள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

இந்த பக்மானே மையம், 2.4 மீட்டர்கள் தொலைவுக்கு ஸ்லாப்புகளை போட்டு கால்வாயை மறைத்து உள்ளனர். இதனால், மழைநீர் வடிந்து செல்வது தவிர்க்கப்பட்டு உள்ளது.

இதேபோன்று, 3 அல்லது 4 படுக்கை அறைகளுடன் கூடிய பூர்வாங்கரா பூர்வா பார்க் ரிட்ஜ் குடியிருப்பின் 2 வீடுகள் பக்மானே மையத்தின் எல்லை சுவரின் குறுக்கே கட்டப்பட்டு உள்ளதுடன் 2.5 மீட்டர் தொலைவுக்கு மழைநீர் வடிகால் கால்வாய் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளன என்பதும் அதிகாரிகளின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

இதுபற்றி பெங்களூரு அரசு நிர்வாகத்தின் உள்ளாட்சி துறை அதிகாரிகள் நேற்றும் ஆய்வு மேற்கொண்டனர். குடியிருப்புவாசிகள் முன் நடந்த இந்த ஆய்வின்போது, செயற்பொறியாளர் ஆர். மாலதி கூறும்போது, கோர்ட்டு உத்தரவின்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார். அதிர்ச்சியில் உள்ள குடியிருப்புவாசிகள் நாங்களும் கோர்ட்டுக்கு செல்வோம் என கூறியுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்