காஷ்மீர்: பாதுகாப்பு படையினர் - பயங்கரவாதிகள் இடையே மோதல்
காஷ்மீரில் பாதுகாப்பு படையினர், பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச்சண்டை நடைபெற்று வருகிறது.;
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே, நாடு சுதந்திரமடைந்து நாளை 75 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில் சுதந்திரதின கொண்டாட்டங்களும், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுதந்திரதின கொண்டாட்டத்தை சீர்குலைக்கு பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் நாடு முழுவதும் பாதுகாப்பு படையினர் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், காஷ்மீரின் ஸ்ரீநகர் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து அப்பகுதியில் இன்று தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். நவ்ஹதா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். துப்பாக்கிச்சண்டை நடைபெறும் பகுதியில் 2-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.