மைசூரு அரண்மனைக்கு வருகிற 4-ந் தேதி யானைகள் அழைத்து வரப்படுகிறது- மந்திரி எச்.சி.மகாதேவப்பா தகவல்

தசரா விழாவையொட்டி மைசூரு அரண்மனைக்கு வருகிற 4-ந் தேதி தசரா யானைகள் அழைத்து வரப்பட உள்ளதாக மந்திரி எச்.டி.மகாதேவப்பா கூறினார்.;

Update:2023-08-15 02:51 IST

மைசூரு:-

ஆலோசனை கூட்டம்

மைசூரு தசரா விழா உலகப்புகழ் பெற்றது. இந்த ஆண்டுக்கான தசரா விழா வருகிற அக்டோபர் மாதம் 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை கோலாகலமாக நடக்கிறது. இந்த நிலையில் மைசூரு டவுனில் உள்ள மாவட்ட பஞ்சாயத்து அலுவலக கூட்ட அரங்கில் நேற்று தசரா விழா தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.டி.மகாதேவப்பா தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மந்திரி வெங்கடேஷ், எம்.எல்.ஏ.க்கள் ஜி.டி.தேவேகவுடா, ஹரீஷ் கவுடா, தன்வீர்சேட், தர்ஷன் துருவநாராயண், கணேஷ் பிரசாத், டி.சங்கர், எம்.எல்.சி.க்கள் எச்.விஸ்வநாட், டி.திம்மையா, மஞ்சேகவுடா, மரிதிப்பேகவுடா, கலெக்டர் ராஜேந்திரா மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கஜ பயணம்

கூட்டத்தில் தசரா விழா தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. தசரா யானைகளை அழைத்து வருவது, கஜ பயணம் நிகழ்ச்சி நடத்துவது, சாலைகள், அரசு கட்டிடங்கள், அரண்மனை வளாக உள்ளிட்டவற்றை சீரமைப்பது, மைசூரு நகரில் அலங்காரங்கள் செய்வது, சிறப்பு அழைப்பாளர்களை தேர்வு செய்து அழைப்பது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க முதல்கட்ட யானைகளின் கஜ பயண நிகழ்ச்சியை வருகிற 1-ந் தேதி(செப்டம்பர்) நடத்த முடிவு செய்யப்பட்டது. மேலும் மைசூரு மாவட்டம் உன்சூர் தாலுகா நாகரஒலே வனப்பகுதியில் இருக்கும் வீரனஒசஹள்ளி கிராமத்தில் இருந்து கஜ பயணத்தை தொடங்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.

யானைகளுக்கு உற்சாக வரவேற்பு

பின்னர் மந்திரி எச்.சி.மகாதேவப்பா பேசுகையில், 'முதல்-மந்திரி சித்தராமையா மைசூரு மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் தசரா விழாவை மிகவும் ஆடம்பரமாக கொண்டாட வேண்டும் என்று நினைக்கிறார். அவரது மனதில் அந்த ஆசை உள்ளது. அதனால் தசரா விழாவுக்கான நிதியை அவர் உடனடியாக விடுவிப்பார். அந்த நிதியை நாம் வீண் செலவு செய்யாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தசரா விழா நடத்தும் விஷயத்தில் அரசுக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது. இளைஞர் விழா, இளைஞர் தசரா, விளையாட்டு போட்டிகள் ஆகியவை வெகுவிமரிசையாக நடத்தப்பட வேண்டும். செப்டம்பர் 1-ந் தேதி கஜ பயணம் தொடங்குகிறது. மேலும் செப்டம்பர் 4-ந் தேதி அரண்மனை வளாகத்தில் யானைகளுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

சுற்றுலா திட்டம்

தசரா விழாவுக்காக 16 துணை கமிட்டிகள் உருவாக்கப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் இன்னும் 3 கமிட்டிகள் உருவாக்கப்படும். இந்த முறை பிராண்ட் 'மைசூரு போட்டி' நடத்தப்படுகிறது. மேலும் தசரா விழாவில் மைசூரு மாவட்டத்தைச் சேர்ந்த கலை குழுவினருக்கு முன்னுரிமை கொடுக்கப்பட உள்ளது. இதுதவிர தசரா விழாவையொட்டி மைசூரு, சாம்ராஜ்நகர், ஹாசன், குடகு, சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுலா தலங்களை உள்ளடக்கிய சுற்றுலா திட்டங்களும் ஏற்பாடும் செய்யப்பட்டுள்ளன' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்