பாரத ஸ்டேட் வங்கி மீது அவமதிப்பு நடவடிக்கை கோரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் 11-ந் தேதி விசாரணை

தேர்தல் பத்திரம் மூலம் பெறப்பட்ட நன்கொடை விவரங்களை சமர்ப்பிக்க, பாரத ஸ்டேட் வங்கி கூடுதல் கால அவகாசம் கேட்டிருந்தது.;

Update: 2024-03-07 23:17 GMT

புதுடெல்லி,

அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிக்க கொண்டு வரப்பட்ட தேர்தல் பத்திர திட்டத்தை சுப்ரீம் கோர்ட்டு கடந்த மாதம் 15-ந் தேதி ரத்து செய்தது.

இதுவரை தேர்தல் பத்திரங்களை வாங்கியவர்கள், அவற்றின் மூலம் நன்கொடை பெற்ற கட்சிகள், நன்கொடை தொகை ஆகிய விவரங்களை மார்ச் 6-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷனிடம் சமர்ப்பிக்குமாறு பாரத ஸ்டேட் வங்கியை சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.

இதற்கிடையே, இந்த கால அவகாசத்தை ஜூன் 30-ந் தேதிவரை நீட்டிக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பாரத ஸ்டேட் வங்கி மனுதாக்கல் செய்துள்ளது. அம்மனு, 11-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

இந்நிலையில், பாரத ஸ்டேட் வங்கி மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி, ஜனநாயக சீர்திருத்த சங்கம், காமன் காஸ் ஆகிய தொண்டு நிறுவனங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளன.

அந்த மனுக்களில், 'கால அவகாசம் முடிவதற்கு 2 நாட்களே இருக்கும்போது பாரத ஸ்டேட் வங்கி ஜூன் 30-ந் தேதிவரை கால அவகாசம் கோரி மனு தாக்கல் செய்துள்ளது. அதன் மனு தீயநோக்கம் கொண்டது.

வேண்டுமென்றே சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு கீழ்ப்படியாமலும், மீறும்வகையிலும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோர்ட்டு அதிகாரத்தை குறைத்து மதிப்பிட தெளிவான முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஸ்டேட் வங்கி மீது கோர்ட்டு அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுக்கள், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது தலைமை நீதிபதி, ''ஒரு இ மெயில் அனுப்புங்கள். 11-ந் தேதி விசாரணைக்கு பட்டியலிட உத்தரவு பிறப்பிக்கிறேன்'' என்று கூறினார். எனவே, இம்மனுக்கள் 11-ந் தேதி விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்