பா.ஜனதா அரசு கொள்ளையில் ஈடுபட்டபோது நீங்கள் ஏன் தடுக்கவில்லை?; பிரதமர் மோடிக்கு, பிரியங்கா காந்தி கேள்வி

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கொள்ளையில் ஈடுபட்டபோது நீங்கள் ஏன் தடுக்கவில்லை? என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2023-05-03 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடகத்தில் பா.ஜனதா அரசு கொள்ளையில் ஈடுபட்டபோது நீங்கள் ஏன் தடுக்கவில்லை? என்று பிரதமர் மோடிக்கு பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

பிரியங்கா காந்தி

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார். நேற்று அவர் விஜயாப்புரா மாவட்டத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டத்தில் பேசினார். முன்னதாக அவர் திறந்த வாகனத்தில் ஊர்வலம் நடத்தினார். அப்போது அவர் பேசியதாவது:-

எல்லாம் அறிந்தவர், சர்வ வல்லமை படைத்தவர் மற்றும் சகலமும் நிறைந்தவர் போல் பேசும் பிரதமர் மோடி கர்நாடக பா.ஜனதா அரசு மக்களிடம் கொள்ளையடித்ததை பார்க்கவில்லையா?. கர்நாடக அரசு அனைத்து பணிகளை மேற்கொள்ள 40 சதவீத கமிஷன் பெற்றது அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அதை பிரதமர் மோடி கண்டுகொள்ளவில்லை.

கனவு காண்பதாக...

'விகாஷ் புருஷ்'(அனைத்தும் அறிந்த ஞானி) போல் பேசும் பிரதமர் மோடி தற்போதும் கர்நாடகத்தில் வளர்ச்சிப் பணிகள் செய்ய கனவு காண்பதாகவும், நாட்டிற்கே கர்நாடகத்தை ஒரு மாதிரி மாநிலமாக உருவாக்க நினைப்பதாகவும் கூறி வருகிறார். இந்த உலகமே பிரதமர் மோடியை 'சர்வ வல்லமை படைத்தவர்', 'எல்லாவற்றுக்கும் மேலானவர்', 'அனைவருக்கும் தலைவர்', 'விகாஷ் புருஷ்' என்று அழைத்தாலும் அந்த வார்த்தைகளுக்கு எல்லாம் அவர் தகுதியானவரா?.

நீங்கள்(பிரதமர் மோடி) ஏன் உங்கள் கனவை இதுவரை நிறைவேற்றவில்லை?. பா.ஜனதா அரசு மக்களிடம் 40 சதவீதம் பெற்று கொள்ளையடித்தபோது அதை ஏன் நீங்கள் கண்டுகொள்ளவில்லை?.

கண்டுகொள்ளவில்லை

பா.ஜனதா அரசு ஊழல், கொள்ளையில் ஈடுபட்டபோது பிரதமர் மோடி கண்களை மூடிக்கொண்டு கனவு கண்டுகொண்டிருந்தார் போலும். நீங்கள்(பிரதமர் மோடி) ஆழ்ந்த கனவில் இருந்தது, நீங்களே கொள்ளை மற்றும் திருட்டுக்கு அனுமதி அளித்து விட்டீர்கள். நீங்கள் யாரையும் தடுக்கவில்லை. உங்கள் அரசு '40 சதவீத கமிஷன் அரசு' என்று அழைக்கப்படுவதை நீங்களே தெளிவுபடுத்த வேண்டும்.

ஒரு காண்டிராக்டர் தன்னிடம் 40 சதவீத கமிஷன் கேட்டு தொல்லை கொடுப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிவிட்டு தற்கொலையும் செய்து கொண்டார். ஆனால் அதற்கு பிரதமர் பதிலே அளிக்கவில்லை. ஏன் பிரதமர் மோடி விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதையும் கண்டுகொள்ளாமல் தான் இருக்கிறார்.

தலைகுனிந்து உள்ளனர்

பா.ஜனதா அரசு செய்த ஊழல், கொள்ளை, அரசு துறைகளிலும், பணி நியமனங்களிலும் நடந்த முறைகேடுகள் ஆகியவை தேர்தல் வந்தவுடன் மறக்கடிக்கப்படுகிறது. ஆனால் அதை மக்கள் மறக்கவில்லை.

பெங்களூருவில் 35 பேர் சாலை பள்ளங்களால் உயிரிழந்துள்ளனர். தற்போது பா.ஜனதா தலைவர்கள் தலைகுனிந்து உள்ளனர். அவர்களால் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை. இதுதவிர பெங்களூருவுக்கு வர வேண்டிய ஏராளமான பன்னாட்டு நிறுவனங்கள் சென்னை, ஐதராபாத் மற்றும் பிற பெரு நகரங்களுக்கு சென்றுவிட்டன. அதற்கு காரணம் கொள்ளை காரணமாக உள்கட்டமைப்பு வசதிகள் பாதிக்கப்பட்டது தான்.

வேலைவாய்ப்பு குறைந்தது

மேலும் கர்நாடகாவின் நந்தினி பாலை ஒழித்துக்கட்ட பா.ஜனதா அரசு முடிவு செய்துவிட்டது. அவர்கள் கர்நாடகத்தில் குஜராத்தை தலைமையிடமாக கொண்ட அமுல் பாலை ஊக்குவித்து வருகிறார்கள். கர்நாடக அரசு துறைகளில் 2.5 லட்சம் பணியிடங்கள் காலியாக இருந்தும், அதை இந்த அரசு நிரப்பவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இவை அனைத்தும் சரிசெய்யப்படும்.

கர்நாடகத்தில் வேலைவாய்ப்பு குறைந்ததற்கு மத்திய பா.ஜனதா அரசு முக்கிய காரணம் ஆகும். அவர்கள் இங்குள்ள அரசு பொதுத்துறைகளை தனியாருக்கு விற்று சின்னாபின்னமாக்கி விட்டனர். மேலும் சிறு தொழில்களின் முதுகெலும்பையும் உடைத்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்