சாதி-மதங்கள் இடையே மோதலை ஏற்படுத்த பிரதமர் மோடி முயற்சி; மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு

பிரதமர் மோடி சாதி-மதங்கள் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.;

Update: 2023-05-03 18:45 GMT

பெங்களூரு:

பிரதமர் மோடி சாதி-மதங்கள் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறார் என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம்சாட்டியுள்ளார்.

அனுமதிக்க மாட்டேன்

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி பா.ஜனதாவின் தேர்தல் பிரசார கூட்டம் கலபுரகியில் நடைபெற்றது. இதில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து பேசியதாவது:-

கர்நாடகத்தில் 40 சதவீத கமிஷன் பா.ஜனதா அரசு, வளர்ச்சி பணிகளை தரமற்ற முறையில் மேற்கொண்டுள்ளன. ஒவ்வொரு பணியிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. நானும் லஞ்சம் வாங்க மாட்டேன், லஞ்சம் வாங்கவும் அனுமதிக்க மாட்டேன் என்று மோடி கூறினார். ஆனால் 40 சதவீத கமிஷன் வசூல் செய்தவர்களை அருகில் உட்கார வைத்து கொண்டு மோடி பேசுகிறார். அவர்களிடம் ஊழல் குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது தானே.

எப்படி அவமதிக்க முடியும்?

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு 40 சதவீத கமிஷன் வசூலும் ஒரு காரணம். சட்டசபை தேர்தலில் மக்கள் காங்கிரசை ஆதரிக்க முடிவு செய்துவிட்டனர். இதை தெரிந்து கொண்ட மோடி, ஒவ்வொரு மாவட்டத்திற்கும் 4 முறை பயணித்து பிரசாரம் செய்கிறார். நானும், எனது மகனும் மோடியை அவமதித்துவிட்டதாக அவரே சொல்கிறார். நாட்டின் பிரதமரை எப்படி அவமதிக்க முடியும்?.

யாராக இருந்தாலும் சரி, பிரதமர் என்பவர் நம்ம ஆள். அவர் தான் கர்நாடகத்தை அவமதிக்கிறார். பிரதமர் மோடி கர்நாடகத்திற்கு என்ன செய்தார் என்பதை முதலில் கூற வேண்டும். நான் மத்திய மந்திரியாக இருந்தபோது, கலபுரகியில் மத்திய பல்லைக்கழகத்தை தொடங்கினேன், இ.எஸ்.ஐ. மருத்துவ கல்லூரியை தொடங்கினேன். ஆனால் தற்போது அவற்றை மாட்டு கொட்டகைகளாக மாற்றிவிட்டனர்.

மோதலை ஏற்படுத்த முயற்சி

கலபுரகியில் நாங்கள் தொடங்கிய தேசிய நெடுஞ்சாலை திட்ட பணிகளை பாதியிலேயே நிறுத்திவிட்டனர். பிரதமர் மோடி சாதி-மதங்கள் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். யார் என்ன முயற்சி செய்தாலும் வட கர்நாடகத்தில் மதக்கலவரத்தை ஏற்படுத்த முடியாது. வெளியில் இருந்து வருகிறவர்கள் சமுதாயத்தை உடைத்தால் தமக்கு வாக்குகள் கிடைக்கும் என்று கருதுகிறார்கள். இது சாத்தியமில்லை.

இவ்வாறு மல்லிகார்ஜூன கார்கே பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்