காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார் என தெரியாது; சித்தராமையா பேட்டி

காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார் என எனக்கு தெரியாது என்று சித்தராமையா கூறியுள்ளார்.;

Update: 2022-08-02 21:11 GMT

பெங்களூரு:

காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார் என எனக்கு தெரியாது என்று சித்தராமையா கூறியுள்ளார்.

முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா தார்வார் மாவட்டம் உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

முக்கியமான கட்டம்

தாவணகெரேயில் எனது பிறந்த நாள் விழா நாளை (இன்று) நடக்கிறது. இந்த விழாவை நான் நடத்தவில்லை. எனது ஆதரவாளர்கள், நலம் விரும்பிகள் இணைந்து இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். 75 வயதை அடைவது என்பது வாழ்க்கையில் ஒரு முக்கியமான கட்டம். இதை கருத்தில் கொண்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனது பலத்தை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக இந்த விழா நடைபெறுவதாக கூறுவது தவறு.

எங்கள் கட்சியில் அணி அரசியல் கிடையாது. சோனியா காந்தி, ராகுல் காந்தி தலைமையில் ஒரே அணியாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். எனது ஆதரவாளர்கள், நான் அடுத்த முதல்-மந்திரி என்று சொல்கிறார்கள். காங்கிரஸ் வெற்றி பெற்றால் யார் முதல்-மந்திரி ஆவார் என்பது எனக்கு தெரியாது. தட்சிண கன்னடா மாவட்டத்தில் தொடர்ந்து கொலைகள் நடைபெற்று வருகின்றன.

நிவாரண பணிகள்

முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, கொலையான பா.ஜனதா பிரமுகரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கியுள்ளார். ஆனால் அதே பகுதியில் கொலையான முஸ்லிம் பிரமுகரின் குடும்பத்தினரை அவர் சந்திக்கவில்லை. அரசு இவ்வாறு பாரபட்சமாக நடந்து கொள்வது சரியல்ல. அனைவரையும் அரசு சமமாக பார்க்க வேண்டும்.

கர்நாடகத்தில் மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளன. ஆனால் இந்த எந்த நிவாரண பணிகளையும் மேற்கொள்ளாமல் அமைதியாக உள்ளது. மக்களின் நலனில் இந்த அரசுக்கு அக்கறை இல்லை. இந்த அரசு மாற்றப்பட வேண்டும். வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்