கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து துணை தலைமை தேர்தல் கமிஷனர் அதிகாரிகளுடன் ஆலோசனை
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் துணை தலைமை தேர்தல் கமிஷனர் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.;
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் அதிகாரிகளுடன் துணை தலைமை தேர்தல் கமிஷனர் பெங்களூருவில் ஆலோசனை நடத்தினார்.
வாக்காளர் அடையாள அட்டை
கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே மாதம் 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி இறுதிக்கட்ட ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக துணை தலைமை தேர்தல் கமிஷனர் அஜய் பாது கர்நாடகம் வந்துள்ளார். அவர் பெங்களூருவில் நேற்று தேர்தல் அதிகாரிகளுடன் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
அதாவது தேர்தல் ஏற்பாடுகள், வாக்களர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள், தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் குறித்த விவரங்களை தோ்தல் அதிகாரிகள் வழங்கினர். வாக்காளர் அடையாள அட்டை அச்சிடும் பணி மற்றும் அவற்றை வினியோகம் செய்தல், வாக்குச்சாவடிகள் குறித்த விவரங்கள், மின்னணு வாக்கு எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருப்பது, சட்டம்-ஒழுங்கை நிலை நாட்டுதல் குறித்த விவரங்களும் அவருக்கு வழங்கப்பட்டன.
தேர்தல் அதிகாரிகள்
தபால் ஓட்டு ஆவணங்கள், தகவல் தொழில்நுட்பம் குறித்து மாவட்ட கலெக்டர்களிடம் இருந்தும் துணை தலைமை தேர்தல் கமிஷனர் விவரங்களை கேட்டு பெற்றார். அதிக தொகுதிகளை கொண்டுள்ள பெங்களூருவில் மேற்கொள்ளப்பட்டுள்ள தேர்தல் ஏற்பாடுகள் குறித்தும் அவர் விவரங்களை கேட்டு பெற்றார். மேலும் அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளுடன் காணொலி மூலமும் அவர் ஆலோசனை நடத்தி தேர்தல் ஏற்பாடுகள் குறித்து விவரங்களை கேட்டு பெற்றார். இந்த கூட்டத்தில் தலைமை தேர்தல் அதிகாரி மனோஜ்குமார் மீனா, கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரிகள் ராஜேந்திர சோழன், வெங்கடேஷ்குமார் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.