தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுலுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

தலைவர்களின் பேச்சு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2024-04-25 07:22 GMT

புதுடெல்லி,

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக எழுந்த புகாரில், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. பிரிவினையை ஏற்படுத்தும் விதமாக பிரதமர் மோடி பேசியதாக காங்கிரஸ் கட்சியும், ராகுல் காந்தி பேசியதாக பா.ஜனதாவும் தேர்தல் ஆணையத்தில் புகாரளித்தன.

இந்த புகார் தொடர்பாக 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் விளக்கமளிக்க பிரதமர் மோடி மற்றும் ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பா.ஜனதா தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரும் விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் தனது உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது: வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பிரசார நடத்தைக்கு அரசியல் கட்சிகள்தான் முதன்மை பொறுப்பை ஏற்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரசார உரைகள் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. தேர்தல் விதிமீறல் புகார் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

நோட்டீஸ் ஏன்?

கடந்த சில தினங்களுக்கு முன்பாக  ராஜஸ்தானில் தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, "பொதுமக்களின் சொத்துக்களையும், தங்கத்தையும் கணக்கெடுத்து, அவற்றை அதிக குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் சமூகத்தினருக்கு பகிர்ந்து அளிக்க காங்கிரஸ் கட்சி விரும்புகிறது" என்று பேசியிருந்தார். பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

தேர்தல் ஆணையத்திலும் மோடியின் பேச்சுக்கு எதிராக புகாரளிக்கப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பா.ஜனதாவும் தேர்தல் ஆணையத்தில் ராகுல் மீது புகாரளித்தது. அந்த புகாரில்,தேர்தல் சூழலை சீர்குலைப்பதற்காக மொழி மற்றும் பிராந்தியத்தின் அடிப்படையில் நாட்டில் வடக்கு-தெற்கு பிரிவினையை ராகுல் காந்தி உருவாக்கி வருகிறார்" என்று கூறியிருந்தது. இந்த புகார்கள் அடிப்படையில் தான் தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்