அமித்ஷாவின் பேச்சில் நடத்தை விதி மீறல் இல்லை - தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தகவல்
அமித்ஷாவின் பேச்சில் நடத்தை விதி மீறல் இல்லை என்று தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
குஜராத்தில் கடந்த மாதம் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் குஜராத்தில் 1995-க்கு முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலங்களில் கலவரங்கள் பெருகியதாகவும், காங்கிரஸ் கட்சி கலவரங்களை தூண்டியதாகவும் கூறினார்.
மேலும் அவர், இந்த கலவரக்காரர்களுக்கு 2002-ல் தகுந்த பாடம் கற்றுக்கொடுக்கப்பட்டதாகவும், மாநிலத்தில் பா.ஜனதா கட்சி நிரந்தர அமைதியை ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
அமித்ஷாவின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதி மீறல் என தேர்தல் கமிஷனில் புகார் செய்யப்பட்டது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு இருந்தது.
தேர்தல் கமிஷன் இதுகுறித்து விசாரித்து வந்த நிலையில், அமித்ஷாவின் இந்த பேச்சு தேர்தல் நடத்தை விதி மீறல் இல்லை என கூறியுள்ளதாக தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. தவறிழைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை குறிப்பிடுவது விதிமீறல் இல்லை என கூறியதாகவும் அந்த வட்டாரங்கள் மேலும் கூறியுள்ளன.