கர்நாடக சட்டசபை தேர்தலில் கம்பளி தொகுதியில் போட்டியிடும் திருநங்கை

கர்நாடக சட்டசபை தேர்தலில் கம்பளி தொகுதியில் திருநங்கை போட்டியிடுகிறார்.

Update: 2023-04-22 18:45 GMT

பெங்களூரு:

கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந்தேதி தொடங்கி கடந்த 20-ந்தேதி நிறைவடைந்தது. மனுக்கள் பரிசீலனை நேற்று முன்தினம் நிறைவடைந்தது. மனுக்களை வாபஸ் பெற நாளை (திங்கட்கிழமை) கடைசி நாளாகும். அதன்பிறகு தான் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். வேட்புமனு பரிசீலனைக்கு பிறகு களத்தில் 3,044 வேட்பாளர்கள் உள்ளனர். இவர்களில் ஒரே ஒரு திருநங்கை மட்டும் களத்தில் உள்ளார். அவர் பல்லாரி மாவட்டம் கம்பளி தொகுதியில் போட்டியிட உள்ளார். அவர் கம்பளியை சேர்ந்த ராமக்கா ஆவார்.

வேட்புமனு தாக்கலுக்கு பிறகு திருநங்கை ராமக்கா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், 'சமுதாயத்தில் திருநங்கைகளுக்கு உரிய மரியாதை இல்லை. எங்களுக்கு சரியான சமத்துவம் கிடைப்பதில்லை. இதனால் நாங்கள் பிச்சை எடுத்து வாழ வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். அதனை மாற்ற வேண்டும். ஆண், பெண் போல நாங்களும் ஒரு பாலினம் தான். திருநங்கைகள் மீதான பார்வையை மாற்றவே தேர்தலில் போட்டியிடுகிறேன். நான் எம்.எல்.ஏ. ஆனால், அனைவருக்கும் சம உரிமை அளித்து ஏழை, எளியோர் மற்றும் பிற்படுத்தபட்டோரின் நலனுக்காக பாடுபடுவேன். எனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள்' என கண்ணீர் மல்க தெரிவித்தார். 

Tags:    

மேலும் செய்திகள்