மராத்தா இட ஒதுக்கீடு போராட்டத்தில் வெடித்த வன்முறை: ஏக்நாத் ஷிண்டே இன்று முக்கிய ஆலோசனை

மராத்தா சமூகத்தினர் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு கடந்த வெள்ளிக்கிழமை ஜல்னாவில் போராட்டம் நடத்தினர். அப்போது வன்முறை ஏற்பட்டதால் தடியடி நடத்தப்பட்டது.

Update: 2023-09-04 05:26 GMT

மும்பை,

மராட்டியத்தில் இடஒதுக்கீடு கேட்டு மராத்தா சமூகத்தினர் பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஜல்னா மாவட்டம் அன்டர்வாலி கிராமத்தில் மராத்தா இடஒதுக்கீடு கேட்டு மனோஜ் பாட்டீல் என்பவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். அவரை அப்புறப்படுத்தி ஆஸ்பத்திரியில் சேர்க்க கடந்த வெள்ளிக்கிழமை போலீசார் அன்டர்வாலி கிராமத்துக்கு சென்றனர். அப்போது அங்கு திரண்டு இருந்த மக்கள் மனோஜ் பாட்டீலை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லவிடாமல் போலீசாரை தடுத்தனர். இதையடுத்து அங்கு வன்முறை வெடித்தது. போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசியும், தடியடி நடத்தியும் கூட்டத்தை கலைத்தனர். 15 அரசு பஸ்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இந்த வன்முறையில் 40 போலீசார் மற்றும் பெண்கள் உள்பட பலர் காயமடைந்தனர்.

இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. உத்தவ் தாக்கரே, சரத்பவார் உள்ளிட்ட தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மனோஜ் பாட்டீல், மராத்தா சமூகத்தினரை சந்தித்து பேசினர். இந்த விவகாரத்தில் உள்துறை பொறுப்பை கவனிக்கும் துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி உள்ளன. இந்தநிலையில் ஜல்னா தடியடி சம்பவம் குறித்து சட்ட-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. சஞ்சய் சக்சேனா விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே கூறினார்.  இந்த நிலையில், மராத்தா இட ஒதுக்கீடு  கோரிக்கை  தீவிரம் அடைந்துள்ள நிலையில்  இது தொடர்பாக  இன்று உயர் மட்ட ஆலோசனையை மராட்டிய முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே நடத்த உள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்