சித்தாபுராவில் மீன்பிடி திருவிழாவின்போது போலீசார் மீது கல்வீச்சு; 5 பேர் படுகாயம்

உத்தரகன்னடா அருகே சித்தாபுராவில் மீன்பிடி திருவிழாவின்போது தகராறு ஏற்பட்டு போலீசார் மீது கல்வீசி தாக்கிய சம்பவம் நடந்துள்ளது. இதில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-05-29 15:12 GMT

மங்களூரு;

மீன்பிடி திருவிழா

உத்தர கன்னடா மாவட்டம் சித்தாபுரா தாலுகாவில் கனகோடா கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள குளத்தில் நேற்று மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இந்த மீன்பிடி திருவிழாவில் உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். மீன்பிடிக்க வருவோரிடம் தலா ரூ.600 கட்டணம் வசூல் செய்யப்பட்டது. குளத்தில் பொதுமக்கள் உற்சாகத்துடன் இறங்கி மீ்ன்பிடித்தனர். ஆனால் கொடுத்த கட்டணத்திற்கு ஏற்ற மீன்கள் கிடைக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மீன்பிடி திருவிழா கமிட்டி உறுப்பினர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். மேலும் கட்டணமாக வசூலித்த பணத்தை திருப்பி தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு கமிட்டி உறுப்பினர்கள் மறுத்துள்ளனர்.

போலீசார் மீது கல்வீச்சு

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அங்கு அமைக்கபட்டு இருந்த சாமியானா பந்தலை பிரித்து கிேழ தள்ளினர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்த முயன்றனர். ஆனால் பொதுமக்கள் போலீசார் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். இதில் 5 பேருக்கு காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து சித்தாபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்