கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் வழக்கு: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்

அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கெஜ்ரிவால், சிறையில் இருந்தபடி பணிகளை கவனித்து வருகிறார்.;

Update: 2024-04-15 08:40 GMT

புதுடெல்லி:

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்குடன் தொடர்புடைய பண மோசடி வழக்கில் டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. கைது நடவடிக்கையில் இருந்து இடைக்கால பாதுகாப்பு அளிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்த நிலையில், கடந்த மாதம் 21-ம் தேதி அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. விசாரணைக்குப் பிறகு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்தபடி பணிகளை கவனித்து வருகிறார்.

அத்துடன் கைது நடவடிக்கைக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வருகிறார். அமலாக்கத்துறை கைது செய்ததை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு, நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபங்கர் தத்தா ஆகியோர் கொண்ட அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கெஜ்ரிவாலின் மனுவுக்கு வரும் 24-ம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த வழக்கு ஏப்ரல் 29-ல் தொடங்கும் வாரத்தில் விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்