எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு அக்.17-ம் தேதிக்கு ஒத்திவைப்பு

எடப்பாடி பழனிசாமி மீதான டெண்டர் முறைகேடு வழக்கு விசாரணை அக்.17-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.;

Update: 2023-09-25 07:21 GMT

புதுடெல்லி,

முந்தைய அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரை விசாரிக்க கோரி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மனுவை சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிபதிகள் அனிருத்தா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த மாதம் விசாரித்தது. அப்போது மனுவின் விசாரணையை 25-ந் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைத்தனர்.

அதன்படி, இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்சஒழிப்புதுறை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் தவே, எதிர்க்கட்சிகள் வழக்கை சந்திப்பது என்பது நாடு முழுவதும் நடந்து வரக்கூடியது தான்; ஆளுங்கட்சியாக இருந்து எதிர்க்கட்சியாக மாறியதற்கு பிறகு அவர்கள் ஆளும் போது என்னென்ன முறைகேடுகளில் ஈடுபட்டார்கள் என்பதை அலசி ஆராய்வது என்பது புதிதாக ஆட்சிப் பொறுப்பில் இருப்பவர்களின் அடிப்படை கடமையாக இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது விசாரணையை தொடங்கியுள்ளோம் என வாதிட்டார். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

அப்போது குறுக்கீட்ட நீதிபதிகள், நீதிமன்றத்தில் இருந்து அரசியல் விவகாரங்களை தள்ளி வையுங்கள் என அறிவுறுத்தினர். மேலும் நாடு முழுவதும் எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் வழக்குகளை எதிர்கொள்கிறார்கள் என்றும் ஆளுங்கட்சியினர் யாரும் வழக்குகளை சந்திப்பதில்லை என நீதிபதி கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை அடுத்த மாதம் 17-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். புகார்தாரார்கள் உள்ளிட்ட மற்ற தரப்பினருக்கு வழக்கின் விவரங்களை பகிர்ந்துகொள்ள நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்