திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிக்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பா? - கைது செய்து விசாரிக்க கவர்னர் உத்தரவு
திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கை கைது செய்ய மேற்கு வங்க கவர்னர் சிவி ஆனந்த போஸ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.;
கொல்கத்தா,
மேற்கு வங்க மாநிலத்தில் ரேஷன் திட்டத்தில் ஊழல் முறைகேடு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. இவ்வழக்கில் மந்திரி ஜோதி பிரியா மாலிக் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள சந்தேஷ்காலியில் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளான ஷாஜஹான் ஷேக், சங்கர் ஆத்யா வீடுகளில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சென்றது. அமலாக்கத்துறை அதிகாரிகள் குழுவுக்கு துணை ராணுவப் படையினர் பாதுகாப்பாக சென்றனர்.
ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் 100-க்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டனர். அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்த கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்ற வாகனத்தையும் அந்த கும்பல் தாக்கியது. இதில், அமலாக்கத்துறையினரின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சிலரும் காயம் அடைந்தனர். இதனால், சோதனை நடத்த முடியாமல் அங்கிருந்து அதிகாரிகள் திரும்பி சென்றனர். இந்த சம்பவம் மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமலாக்கத்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் முக்கிய குற்றவாளியான திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகி ஷாஜஹான் ஷேக்கை கைது செய்ய மேற்கு வங்க கவர்னர் சிவி ஆனந்த போஸ் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அவர் எல்லை தாண்டி தப்பியிருக்கலாம் என்று கவலை தெரிவித்துள்ள கவர்னர், ஷாஜஹானை உடனடியாக கைது செய்து, பயங்கரவாதிகளுடன் அவருக்கு உள்ள தொடர்பு குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். .
ஷாஜஹான் ஷேக்கிற்கு பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக கவர்னர் கூறியது, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. கவர்னரின் கருத்து குறித்து பதிலளித்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குணால் கோஷ், "கவர்னரின் கருத்துகளின் அடிப்படை என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை. அரசியல் சாசனத்தின்படி, மாநில அரசுடன் கலந்தாலோசித்துதான் கவர்னர் செயல்பட வேண்டும்.
அப்படி இருக்கும்போது, உறுதியான அறிக்கை அல்லது ஆதாரம் எதுவும் இல்லாமல் அவர் எப்படி கருத்து தெரிவிக்க முடியும்? இணை அரசாங்கத்தை நடத்த அவர் இங்கு வரவில்லை" என்று கூறியுள்ளார். ஷாஜஹான் நாட்டை விட்டு தப்பியோட வாய்ப்புள்ளது என்று அமலாக்கத்துறை அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.