பணமோசடி வழக்கு; ஜார்க்கண்ட் முதல்-மந்திரியின் உதவியாளர் கைது
பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரியின் உதவியாளரை அமலாக்கத்துறையின் கைது செய்தனர்.
ராஞ்சி,
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனின் அரசியல் உதவியாளர் பங்கஜ் மிஸ்ரா. மாநிலத்தில் உள்ள சுங்கச்சாவடிகளை ஒப்பந்தத்தில் விடுவதில் ஊழல் நடைபெற்றதாகவும், சட்டவிரோத சுரங்கங்களில் பங்கஜ் மிஸ்ராவுக்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் பணமோசடியில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதையடுத்து, அம்மாநிலத்தின் சஹிப்கஞ்ச் மாவட்டத்தில் பங்கஜ் மிஸ்ராவுக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் கடந்த 8-ம் தேதி அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பங்கஜ் மிஸ்ராவின் உறவினர்கள், நண்பர்கள் வீடுகள் என 18 இடங்களில் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனையில் பங்கஜ் மிஸ்ராவின் நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத 5 கோடியே 32 லட்ச ரூபாயை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். மேலும், பங்கஜ் மிஸ்ரா மற்றும் அவரது நெருங்கிய உறவினர் தோகா யாதவ் ஆகியோரின் 37 வங்கிக்கணக்குகளில் உள்ள 11 கோடியே 88 லட்ச ரூபாயை அமலாக்கத்துறையினர் முடக்கியுள்ளனர்.
இந்நிலையில், பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரியின் உதவியாளர் பங்கஜ் மிஸ்ராவை அமலாக்கத்துறையின் நேற்று கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பங்கஜ் மிஸ்ரா ராஞ்சி கோர்ட்டில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்ளார். அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறை கோர்ட்டில் அனுமதிகேட்க உள்ளது.