தெலுங்கானாவில் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்க தேர்தல் ஆணையம் திடீர் தடை.. ஏன் தெரியுமா?

தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது பணப் பட்டுவாடாவை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அரசுக்கு தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

Update: 2023-11-27 05:26 GMT

புதுடெல்லி:

தெலுங்கானாவில் வரும் 30ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. ஓட்டுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்களை கொடுப்பதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், விவசாயிகளுக்கான நிதி உதவி திட்டமான 'ரிது பந்து' திட்டத்தின்கீழ், நிதியுதவியை வழங்குவதற்கான அனுமதியை தேர்தல் ஆணையம் இன்று திடீரென திரும்ப பெற்றுள்ளது.

மாநில மந்திரி ஒருவர், தேர்தல் நடத்தை விதிகளை மீறி, இந்த திட்டம் குறித்து பகிரங்கமாக அறிவிப்பு வெளியிட்ட நிலையில் தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள காலத்தில், சில காரணங்களுக்காக விவசாயிகளுக்கு ரபி பருவத்திற்கான தவணையை வழங்க தேர்தல் ஆணையம் ஒப்புதல் வழங்கியிருந்தது. இதற்காக சில நிபந்தனைகளையும் விதித்திருந்தது. அந்த நிபந்தனையின் ஒரு பகுதியாக, தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்போது பணப் பட்டுவாடாவை விளம்பரப்படுத்த வேண்டாம் என்று அரசுக்கு வலியுறுத்தப்பட்டது.

ஆனால் மாநில நிதி மந்திரி, ரிபி பருவ தவணைகளை வழங்குவது குறித்து பகிரங்கமாக அறிவிப்பை வெளியிட்டார். விவசாயிகளுக்கு திங்கட்கிழமை பணம் வழங்கப்படும், விவசாயிகள் காலை உணவு மற்றும் தேநீர் சாப்பிடுவதற்கு முன்பே, அவர்களின் கணக்கில் தொகை வரவு வைக்கப்படும், என்று அவர் கூறியதாக தெரிகிறது.

இதனால் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் இருக்கும்வரை இந்த திட்டத்தின் கீழ் எந்த பணமும் வழங்கக்கூடாது என தெலுங்கானா தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்