தேர்தல் பிரசார வீடியோவில் குழந்தையை பயன்படுத்திய விவகாரம்: பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
தேர்தல் பிரசார வீடியோவில் குழந்தையை பயன்படுத்திய விவகாரத்தில் பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சண்டிகர்,
அரியானாவில் முதல்-மந்திரி நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையே, அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் அக்டோபர் 1ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்ற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அக்டோபர் 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் தேர்தல் பிரசாரத்தை தொடங்கியுள்ளன.
இதனிடையே, தேர்தல் பிரசாரத்தின் ஒருபகுதியாக அரசியல் கட்சிகள் பிரசார வீடியோக்களையும் வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில் பாஜக சமீபத்தில் பிரசார வீடியோவை வெளியிட்டிருந்தது. அந்த வீடியோவில் ஒரு குழந்தை பாஜகவுக்கு ஆதரவான கருத்துக்களை தெரிவிக்கும் வசனங்கள் இடம்பெற்றிருந்தன. தேர்தல் பிரசாரத்தில் குழந்தைகளை பயன்படுத்தக்கூடாது என்ற விதி உள்ள நிலையில் பாஜக விதியை மீறியுள்ளதாக ஆம் ஆத்மி குற்றஞ்சாட்டியது.
இந்நிலையில், தேர்தல் பிரசாரத்தில் குழந்தையை பயன்படுத்த சம்பவம் தொடர்பாக பாஜகவுக்கு தலைமை தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அரியானா மாநில பாஜக தலைவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம் பிரசார வீடியோவை உடனடியாக நீக்கும்படியும் இது தொடர்பாக நாளை மாலை 6 மணிக்குள் விளக்கம் அளிக்கும்படியும் தெரிவித்துள்ளது.