குஜராத்தில் நிலநடுக்க நினைவகம் மற்றும் அருங்காட்சியகம்; திறந்து வைத்து பார்வையிட்ட பிரதமர் மோடி

குஜராத்தில் பூஜ் பகுதியில் 2001-ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் நினைவாக அருங்காட்சியகம் ஒன்றை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.;

Update: 2022-08-28 05:41 GMT



பூஜ்,



குஜராத்தின் பூஜ் பகுதியில் கடந்த 2001-ம் ஆண்டு ஜனவரியில் நாட்டின் 52-வது குடியரசு தினத்தன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு மக்களை நிலைகுலைய செய்தது. 2 நிமிடங்களே நீடித்த இந்நிலநடுக்கத்திற்கு பின் ஏற்பட்ட விளைவுகள் கற்பனை செய்து பார்க்க முடியாதவை.

இதில் 20 ஆயிரம் பேர் வரை உயிரிழந்தனர். 1.7 லட்சத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த நிலநடுக்கம் நேபாளம் மற்றும் பாகிஸ்தானிலும் கூட உணரப்பட்டது. நாட்டின் 70 சதவீத பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.

குஜராத்தில் உள்ள 25 மாவட்டங்களில் 22 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதில், பல வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட கட்டிடங்கள் அடியோடு சரிந்தன. நிலநடுக்கத்திற்கு பின்னரும் 600 முறை 2.8 முதல் 5.9 வரையிலான ரிக்டர் அளவில் நிலநடுக்கங்கள் நீடித்து மக்களை அச்சத்தில் ஆழ்த்தின.




 

இந்த நிலநடுக்க பாதிப்பின் நினைவாக குஜராத்தின் பூஜ் பகுதியில் ஸ்மிரிதிவன்-2001 நிலநடுக்க நினைவகம் மற்றும் அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இதனை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பூபேந்திர பட்டேல் மற்றும் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.



Tags:    

மேலும் செய்திகள்