டாக்டர்களுடன் தொலைதூரத்தில் இருந்தபடி ஆலோசனை மேற்கொள்ள உதவிய இ-சஞ்சீவனி செயலி: பிரதமர் மோடி உரை

நாட்டில் மறைந்து வரும் இசை கருவிகளுக்கு புத்துயிர் அளிக்கும் கலைஞர்களுக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் விருது வழங்கப்படுகிறது என பிரதமர் மோடி உரையில் கூறியுள்ளார்.

Update: 2023-02-26 07:24 GMT


புதுடெல்லி,


பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் மன் கி பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் காலை 11 மணிக்கு அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

2-வது முறையாக பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னரும் இந்த நடைமுறை தொடர்ந்து வருகிறது. இந்நிகழ்ச்சியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து அவர் பேசி வருகிறார். அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான மன் கி பாத் வானொலி நிகழ்ச்சி இன்று காலை தொடங்கியது. இது 98-வது மன் கி பாத் நிகழ்ச்சியாகும்.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசும்போது, இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்தும் கலைஞர்களுக்கு உஸ்தாத் பிஸ்மில்லா கான் யுவ புரஸ்கார் விருது அளிக்கப்படுகிறது. மறைந்து வரும் இசை கருவிகளுக்கு புத்துயிர் அளிக்கும் அனைத்து கலைஞர்களுக்கும் கூட இந்த விருது வழங்கப்படுகிறது என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, டிஜிட்டல் இந்தியா பற்றி குறிப்பிட்டார். டிஜிட்டல் இந்தியாவின் ஆற்றல் ஒவ்வோர் இடத்திலும் காணப்படுகிறது. இ-சஞ்சீவனி செயலியானது, டாக்டர்களுடன் தொலைதூரத்தில் இருந்தபடி ஆலோசனை மேற்கொள்ள உதவுகிறது.

இந்த செயலியை பயன்படுத்தி வரும் மருத்துவர்கள் மற்றும் மக்களை நான் பாராட்டுகிறேன். முக்கிய தருணத்தில் அது நிறைய உதவிகளை செய்து உள்ளது என்று அதன் பயன்களை பற்றி அவர் பேசியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்று காலத்தில் டாக்டர்கள், சுகாதார பணியாளர்கள், நர்சுகள் முன்களத்தில் நின்று பணியாற்றும்போது, தொற்று பாதிப்புக்கு ஆளானார்கள். இதனால், அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

அதுபோன்ற தருணங்களிலும், இந்த வகையான தொலைதூரத்தில் இருந்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் முறை பரவலாக காணப்பட்டது. இதனால், டாக்டர்கள் வேறு இடத்தில் இருந்தபோதும், தொலைதூர பகுதிகளுக்கு உடனடியாக செல்ல முடியாதபோதும், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த செயலி பெரிதும் உதவியது.

Tags:    

மேலும் செய்திகள்