மைசூருவில் தசரா யானைகளுக்கு 2-ம் கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி

மைசூருவில் தசரா யானைகளுக்கு 2-ம் கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது.;

Update: 2022-09-16 21:28 GMT

மைசூரு:

மைசூரு தசரா விழா

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 26-ந் தேதி அடுத்த மாதம்(அக்டோபர்) 5-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க வந்துள்ள 14 யானைகளுக்கும் நடைபயிற்சி உள்பட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த யானைகளுக்கு பீரங்கி வெடி சத்த பயிற்சி கடந்த சில நாட்களுக்கு முன்பு கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் பீரங்கி வெடி சத்த பயிற்சி 2-ம் கட்டமாக நேற்று கொடுக்கப்பட்டது.

அதன்படி ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்க வந்துள்ள யானைகளுக்கு நேற்று மைசூரு அருகே பெங்களூரு - நீலகிரி சாலையில் தசரா கண்காட்சி வாரியம் எதிரில் உள்ள வாகன நிறுத்த மைதானத்தில் வைத்து பயிற்சி அளிக்கப்பட்டது.

மிரளவில்லை

இதில் 12 யானைகள், 41 குதிரைகள் பங்கேற்றன. நேற்றும் 7 பீரங்கிகளைக் கொண்டு தலா 3 முறை என 21 முறை பீரங்கிகளில் குண்டுகளை வெடிக்கச் செய்து யானைகளுக்கும், குதிரைகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த முறை பீரங்கி வெடி சத்தத்தைக் கேட்டு யானைகளும், குதிரைகளும் மிரளவில்லை. அவைகள் அப்படியே நின்று கொண்டிருந்தன.

முன்னதாக யானைகளும், குதிரைகளும் அணிவகுத்து நிற்க வைக்கப்பட்டு இருந்தன. பீரங்கிகள் அனைத்திலும் குண்டுகளை வெடிக்கச் செய்த பிறகு யானைகள் மற்றும் குதிரைகளை பாகன்களும், வளர்ப்பவர்களும் அழைத்து வந்து குண்டு நெடியை முகரச் செய்தனர். 3-ம் கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி வருகிற 23-ந் தேதி நடைபெறும் என்று அரண்மனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அரண்மனைக்கு பாதிப்பு

இதுபற்றி வனத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'மைசூரு அரண்மனையில் வைத்து முதல்கட்ட பீரங்கி வெடி சத்த பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் பீரங்கிகளை தொடர்ந்து வெடிக்கச் செய்வதால் அரண்மனைக்கு பாதிப்பு ஏற்படும் என்ற காரணத்தால் தற்போது தசரா கண்காட்சி வாரியம் எதிரில் வைத்து இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது' என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்