தசரா யானைகளின் உடல் எடை 400 கிலோ வரை அதிகரிப்பு வனத்துறை அதிகாரி தகவல்

மைசூருவுக்கு வந்த பிறகு தசரா யானைகளின் உடல் எடை 400 கிலோ வரை அதிகரித்துள்ளதாக வனத்துறை அதிகாரி சந்தோஷ் தெரிவித்துள்ளார்.;

Update: 2023-10-07 18:45 GMT

மைசூரு

மைசூரு தசரா விழா

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா ஒவ்வொரு ஆண்டும் நவராத்திரியையொட்டி கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மைசூரு தசரா விழா வருகிற 15-ந்தேதி தொடங்கி 24-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்க உள்ளது.

இதற்கான ஏற்பாடுகள் ைமசூருவில் தீவிரமாக நடந்து வருகிறது. மைசூரு நகரம் முழுவதும் சீரமைப்பு பணி மற்றும் மின்விளக்குகளை பொருத்தும் பணி நடந்து வருகிறது.

மேலும் மன்னர்களின் சிலைகள் வர்ணம் பூசப்பட்டு வருகிறது. தசரா விழா தொடங்க இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தற்போதே மைசூரு நகரம் விழா கோலம் பூண்டுள்ளது.

யானைகள்

இந்த தசரா விழாவில் பங்கேற்க தங்க அம்பாரியை சுமக்கும் அபிமன்யு உள்பட 14 யானைகள் 2 கட்டமாக மைசூருவுக்கு வந்துள்ளன. அவை மைசூரு அரண்மனை வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. அந்த யானைகளுடன் வந்த பாகன்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரும் அரண்மனை வளாகத்தில் தங்கி உள்ளனர். இதற்காக அங்கு கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.

யானைகளுக்கு தினமும் காலையும், மாலையும் நடைபயிற்சி, சுமை தூக்கும்  பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சத்தான உணவு வகைகளும் வழங்கப்பட்டு வருகிறது. தசரா யானைகளை கால்நடை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

சத்தான உணவுகள்

யானைகள் பராமரிப்பு மற்றும் பயிற்சிகள் அளிப்பதை மைசூரு மண்டல வனத்துறை அதிகாரி சந்தோஷ், அரண்மனையில் தங்கி இருந்து கண்காணித்து வருகிறார். இதுகுறித்து அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தசரா விழாவில் பங்கேற்க 2 கட்டங்களாக 14 யானைகள் மைசூருவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளது. அந்த யானைகளுக்கு 3 கட்டங்களாக எடை பரிசோதனை செய்ய திட்டமிட்டுள்ளோம். ஏற்கனவே 2 முறை யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டு விட்டது. இனிமேல் தசரா விழா முடிவடைந்து அவை இருப்பிடங்களுக்கு செல்லும்போது எடை பரிசோதனை செய்யப்படும்.

யானைகளுக்கு தினமும் சத்தான உணவு வகைகள் வழங்கப்பட்டு வருகிறது. கோதுமை, உளுந்து, பாசி பயிர், அரிசி, வெங்காயம் ஆகியவை வேக வைத்து 10 கிலோ எடையில் உருண்டையாக உருட்டி யானைகளுக்கு வழங்கப்படுகிறது. இது தவிர கரும்பு, ஆலமர இலை, நெல் ஆகியவையும் வழங்கப்படுகிறது.

மேலும் தினமும் வைக்கோல், நெல், வெல்லம், கொப்பரை தேங்காய் என 300 கிலோ வரை ஒவ்வொரு யானைக்கும் கொடுக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 50 லிட்டர் முதல் 60 லிட்டர் வரை தண்ணீரை யானைகள் குடிக்கிறது.

400 கிலோ அதிகரிப்பு

யானைகளை கால்நடை டாக்டர் முஜீப் தலைமையிலான குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். இதுவரை யானைகளுக்கு வயிற்று போக்கு, கால் வலி உள்ளிட்ட உடல் நல குறைவு எதுவும் ஏற்படவில்லை. யானைகள் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கின்றன. தசரா யானைகள் மைசூரு வந்த பிறகு சுமார் 300 முதல் 400 கிலோ வரை எடை அதிகரித்துள்ளன.

அடுத்த 3 நாட்களுக்கு அபிமன்யு யானைக்கு மரத்தால் ஆன அம்பாரியை சுமக்கும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் யானைகளுக்கு பீரங்கி குண்டு சத்தம் கேட்கும் பயிற்சியும் அளிக்கப்பட உள்ளது.

பாகன்களின் குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பாகன்களின் குழந்தைகள் படிக்க வசதியாக அரண்மனை வளாகத்தில் தற்காலிக பள்ளி அமைக்கப்பட்டுள்ளது. மருத்துவ முகாமும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்