சித்தராமையா ஆட்சியில் கர்நாடகம் வளர்ச்சியில் பின்னோக்கி சென்றது; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேச்சு

சித்தராமையா ஆட்சியில் கர்நாடகம் வளர்ச்சியில் பின்னோக்கி சென்றதாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறினார்.

Update: 2022-11-09 19:00 GMT

பெலகாவி:

பணம் சம்பாதித்தனர்

பெலகாவி மாவட்ட பா.ஜனதா சார்பில் ஜனசங்கல்ப யாத்திரை பொதுக்கூட்டம் நேற்று ராய்பாக் பகுதியில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கலந்துகொண்டு பேசும்போது கூறியதாவது:-

சித்தராமையா முதல்-மந்திரியாக இருந்தபோது, மத்திய அரசு ஏழை மக்களுக்கு வழங்கிய அரிசி பைகளில் தனது படத்தை அச்சிட்டார்.மேலும் அந்த அரிசியிலும் முறைகேடு செய்யப்பட்டது. காங்கிரசார் பெங்களூரு, மங்களூரு, பல்லாரியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களில் முறைகேடான வழியில் பணம் சம்பாதித்தனர். சித்தராமையா ஆட்சி காலத்தில் வளர்ச்சியில் கர்நாடகம் பின்னோக்கி சென்றது.

இழிவாக பேசுகிறார்

காங்கிரசார் தங்களின் சுயநலத்திற்காக அரசியல் செய்கிறார்கள். அதனால் காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைய கூடாது என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கர்நாடக வாக்காளர்கள் பா.ஜனதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த முடிவு செய்துவிட்டனர். காங்கிரசில் சித்தராமையா, டி.கே.சிவக்குமாருக்கு இடையே பனிப்போர் நீடித்து வருகிறது. காங்கிரஸ் செயல் தலைவர் சதீஸ் ஜார்கிகோளி இந்து மதத்தை இழிவாக பேசுகிறார். அவர் ஏன் அப்படி பேசுகிறார் என்று எனக்கு தெரியவில்லை.

உலகில் எந்த மதமும் இல்லாதபோது சிந்து சமவெளி கலாசாரம் இந்து மதமாக வளர்ந்தது. ஒட்டுமொத்த மனித சமூகமும் ஒரே குலம் என்று இந்து மதம் சொல்கிறது. அத்தகை இந்து மதத்தை சதீஸ் ஜார்கிகோளி விமர்சிக்கிறார். தேர்தல் வரும்போது ராகுல் காந்தி கோவிலுக்கு செல்கிறார். இறைச்சி சாப்பிட்டுவிட்டு சித்தராமையா கோவிலுக்கு செல்கிறார். இந்தியா ஒற்றுமையாக இருக்கும்போது, ராகுல்காந்தி ஒற்றுமை பாதயாத்திரையை நடத்துகிறார். காங்கிரஸ் கட்சிக்கு கெட்ட நேரம் வந்துவிட்டது.

இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்