சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசையில் 344-வது இடத்தை பிடித்தது சென்னை ஐ.ஐ.டி
கல்வி நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு, கல்வியின் தரம், ஆசிரியர்-மாணவர் விகிதம், பேராசிரியர்களின் ஆய்வுகள் சமர்ப்பிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு தரவரிசை பட்டியலை கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டு வருகிறது.;
உலக அளவில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் 'குவாகுவரெல்லி சைமண்ட்ஸ்' (கியூ.எஸ்.) என்ற லண்டனை சேர்ந்த நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 20-வது பதிப்பான 'உலக பல்கலைக்கழக தரவரிசை பட்டியல்-2024'-ஐ, கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலகளவில் 104 இடங்களில் உள்ள 1,500 கல்வி நிறுவனங்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் இந்த பட்டியல் வெளியாகி இருக்கிறது.
கல்வி நிறுவனத்தின் மீதான நன்மதிப்பு, கல்வியின் தரம், ஆசிரியர்-மாணவர் விகிதம், பேராசிரியர்களின் ஆய்வுகள் சமர்ப்பிப்பு உள்ளிட்ட காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த பட்டியலை கியூ.எஸ். நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு நிலைத்தன்மை, வேலைவாய்ப்பு, ஆராய்ச்சி நெட்வொர்க் போன்ற காரணிகளை புதிதாக சேர்த்தும், அதன் அடிப்படையிலும் தரவரிசை பட்டியல் வெளியாகியுள்ளது.
அதன்படி இந்த பட்டியலில் கனடாவில் உள்ள டோரன்டோ பல்கலைக்கழகம், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகம், லண்டனில் உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகம் ஆகியவை முதல் 3 இடங்களை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 'டெல்லி பல்கலைக்கழகம் 220-வது இடத்தையும், மும்பை ஐ.ஐ.டி. 303-வது இடத்தையும், சென்னை ஐ.ஐ.டி. 344-வது இடத்தையும், காரக்பூர் ஐ.ஐ.டி. 349-வது இடத்தையும், ரூர்கே ஐ.ஐ.டி. 387-வது இடத்தையும், டெல்லி ஐ.ஐ.டி. 426-வது இடத்தையும், வி.ஐ.டி. 449-வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 496-வது இடத்தையும்' பெற்றுள்ளன. இதன்படி இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள் முதல் 100 இடங்களை பிடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.