பஸ்சை நிறுத்தாததால் மதுபோதையில் கண்டக்டர் மீது பாம்பை வீசிய பெண் பயணி
பஸ்சை நிறுத்தாததால் மதுபோதையில் இருந்த பெண் பயணி கண்டக்டர் மீது பாம்பை வீசியுள்ளார்.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் மாவட்டம் நலகொண்டா பகுதியில் நேற்று மாலை அரசு பஸ்சில் பெண் பயணி ஒருவர் ஏறியுள்ளார். மதுபோதையில் இருந்த அப்பெண் பயணி வித்யாநகர் சிக்னலில் தன்னை இறக்கிவிடும்படி கூறியுள்ளார்.
ஆனால், அந்த பகுதியில் நிறுத்தம் இல்லாததால் அடுத்த நிறுத்தத்தில் இறங்கிக்கொள்ளும்படி பெண் கண்டக்டர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பெண் பயணி தான் குறிப்பிட்ட நிறுத்தம் வந்தபோது பஸ்சை நிறுத்தாததால் பெண் கண்டக்டருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். பின்னர், தனது பையில் மறைத்து கொண்டு வந்த பாம்பை கண்டக்டர் மீது வீசியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த பெண் கண்டக்டரும், சக பயணிகளும் அலறினர். இதனால், பஸ்சை உடனடியாக டிரைவர் நிறுத்தினார். இதையடுத்து, பஸ்சில் இருந்து கீழே இறங்கிய பெண் பயணி பஸ் மீது கல்லை வீசினார். இதில் பஸ்சின் கண்ணாடி சேதமடைந்தது.
இதையடுத்து, அங்கிருந்து அப்பெண் தப்பியோடினார். இந்த சம்பவம் குறித்து பஸ் கண்டக்டர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், தப்பியோடிய பெண்ணை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெண்ணின் கணவர், பாம்புகளை பிடிக்கும் வேலை செய்து வருவது தெரியவந்தது.