கேரளாவில் சாலை என நினைத்து தண்டவாளத்தில் காரை ஓட்டிய போதை ஆசாமி

சாலை என நினைத்து மதுபோதையில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய ஆசாமியை இளைஞர்கள் தடுத்து நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Update: 2023-07-22 17:07 GMT

கேரளாவில் நடந்த இந்த பரபரப்பு சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

தண்டவாளத்தில் காரை ஓட்டிய ஆசாமி

கேரள மாநிலம் கண்ணூர் அஞ்சரக்கண்டிவையை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ். அவருக்கு வயது 48 ஆகிறது. இவர் கடந்த 18-ந் தேதி கண்ணூர் பகுதியில் மதுபோதையில் காரை ஓட்டியுள்ளார். அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் நிதானமின்றி இருந்துள்ளார். கண்ணூர் தெற்கு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது சாலைக்கு செல்வதற்கு பதிலாக திடீரென காரை திருப்பி தண்டவாளத்தில் ஓட்டியபடி சென்றார்.

அப்போது அந்த பகுதியில் நின்ற இளைஞர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் கூச்சலிட்டனர். அதே சமயத்தில் போதையில் இருந்த ஆசாமிக்கோ எதுவும் கேட்கவில்லை. ஏதோ சாலையில் ஜல்லி கிடக்கிறது போலவும், கார் குலுங்கிச் செல்வதை போலவும் ஆசாமிக்கு சொகுசாக இருந்துள்ளது. இதனால் அவர் தண்டவாளத்திலேயே தொடர்ந்து பயணித்தார். ஒரு கட்டத்தில் தண்டவாளத்தில் இயக்க முடியாமல் கார் பாதியில் நின்று விட்டது.

சாலை என நினைத்து ஓட்டி விட்டேன்

இதற்கிடையே பின்னாலேயே ஓடி வந்த இளைஞர்கள் காரின் அருகில் பதற்றத்துடன் வந்து நின்றனர். அப்போதும் ஆசாமி சுயநினைவுக்கு வரவில்லை. இளைஞர்களை பார்த்த ஆசாமி, கார் திடீரென நின்று விட்டது, கொஞ்சம் தள்ளுங்க பாஸ் என கூறியுள்ளார். இதனை கேட்ட இளைஞர்கள், கீழே இறங்குயா? போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் தண்டவாளத்திலா காரை ஓட்டுவாய்? என கூறியுள்ளனர். ஓ, இது தண்டவாளமா? சாலை என நினைத்து ஓட்டி விட்டேன் என கூலாக அவர் தெரிவித்த பதிலை கேட்டு இளைஞர்கள் வெடவெடத்து போனார்கள்.

பெரும் விபத்து தவிர்ப்பு

பின்னர் அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி காரை தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தை தொடர்ந்து சற்று நேரத்தில் அந்த வழியாக ராஜதானி எக்ஸ்பிரஸ் ரெயில் கடந்து சென்றது. காரை மீட்பதில் இளைஞர்கள் துரிதமாக செயல்பட்டதால் அங்கு பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

ரெயில்வே கேட்டில் இருந்து சுமார் 15 மீட்டர் தூரத்துக்கு தண்டவாளத்தில் போதை ஆசாமி காரில் பயணித்ததாகவும், சற்று தாமதம் ஆகியிருந்தால் அந்த காரில் ரெயில் மோதி பெரும் விபத்து நடந்து உயிர்சேதம் நேர்ந்திருக்கலாம் என இளைஞர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே இந்த சம்பவம் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனை தொடர்ந்து ரெயில்வே போலீசார் ஜெயபிரகாஷ் மீது வழக்குப்பதிவு செய்தனர். ரெயில் வரும் நேரத்தில் தண்டவாளத்தில் காரை ஓட்டிய ஆசாமியால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்