ரூ.2 கோடி போதைப்பொருட்கள் சிக்கியது

பெங்களூருவில் விற்பனை செய்ய முயன்ற ரூ.2 கோடி போதைப்பொருட்கள் சிக்கியது. இதுதொடர்பாக நைஜீரியாவை சேர்ந்தவர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.;

Update: 2022-12-20 18:45 GMT

பெங்களூரு:-

கமிஷனர் பேட்டி

பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டி நேற்று தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பெங்களூரு ஷாம்புரா மெயின் ரோட்டில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக டி.ஜே.ஹள்ளி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் போலீசார் ரோந்து சென்ற போது ஷாம்புரா மெயின் ரோட்டில் உள்ள பள்ளியின் மைதானத்தில் நின்று கொண்டு போதைப்பொருட்களை சாக்லெட் கவரில் மறைத்து வைத்து விற்பனை செய்த ஒரு வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில் அவர் டி.ஜே.ஹள்ளி முனிவீரப்பா லே-அவுட்டை சேர்ந்த முகமது உசேன்(வயது 26) என்பதும், இவர் நேபாளத்தை சேர்ந்த ஆகாஷ் என்பவரிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்து சாக்லெட் கவரில் வைத்து தொழில் அதிபர்கள், கல்லூரி மாணவர்கள், ஐ.டி.நிறுவன ஊழியர்களுக்கு விற்று வந்ததும் தெரியவந்தது. அவரிடம் இருந்து ரூ.1.39 கோடி மதிப்பிலான 4½ கிலோ போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரூ.2.10 கோடி போதைப்பொருட்கள்

இதுபோல டி.ஜே.ஹள்ளி போலீசார் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக கேரளாவை சேர்ந்த ஒரு வாலிபர் உள்பட 2 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.60.60 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுபோல நைஜீரியாவை சேர்ந்த ஐகியா ஒன்வுகா என்ற நபரையும் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக டி.ஜே.ஹள்ளி போலீசார் கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ரூ.10.40 லட்சம் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. ஒட்டுமொத்தமாக 3 வழக்குகளில் இருந்தும் ரூ.2.10 கோடி மதிப்பிலான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டு உள்ளன. கைதான 4 பேர் மீதும் போதைப்பொருள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களை கமிஷனர் பிரதாப் ரெட்டி பார்வையிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்