போதைப்பொருள் கடத்தல் வழக்கு: ஜாபர் சாதிக்கின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக் உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக டெல்லி கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கு ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கடத்திய வழக்கில் சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேரும் பிடிபட்டனர். இதையடுத்து சென்னையை சேர்ந்த ஜாபர்சாதிக், அவரது நெருங்கிய கூட்டாளி சதானந்தம் உள்ளிட்டோரையும் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த 5 பேரின் நீதிமன்ற காவல் இன்று நிறைவடைந்ததை தொடர்ந்து டெல்லி பாட்டியாலா கோர்ட்டில் நீதிபதி சுதிர்குமார் சிரோஹி முன்பு ஜாபர் சாதிக் உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்பட்டனர். இதையடுத்து, 5 பேரின் நீதிமன்ற காவலை வரும் 20-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார். மேலும் வழக்கின் மீதான அடுத்தக்கட்ட விசாரணை 20-ம் தேதி நடைபெறும் என்று நீதிபதி தெரிவித்தார்.
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக், சென்னையைச் சேர்ந்த முஜிபுர், முகேஷ், சதானந்தம், விழுப்புரத்தைச் சேர்ந்த அசோக்குமார் ஆகிய 5 பேருக்கு எதிராக மத்திய போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் டெல்லி சிறப்பு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.